தேடுதல்

திருத்தந்தை: நமது மன்னிக்கும் திறனை அதிகரிப்போமாக!

இக்கால மறைச்சாட்சிகள், மன்னிப்பு, மற்றும் ஒப்புரவுக்குச் சாட்சிகளாக விளங்குகின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

பிறரன்புப் பணிகள், இறைவார்த்தைக்குப் பிரமாணிக்கம், மன்னிப்பு ஆகியவை வழியாக நம் கிறிஸ்தவச் சான்றுவாழ்வில் சிறந்து வளரமுடியும் என்பதற்கு மறைச்சாட்சியான புனித ஸ்தேவான் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று கூறினார். 

டிசம்பர் 26, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான் திருநாளை முன்னிட்டு, பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஸ்தேவானின் வாழ்வில் மிளிர்ந்த பிறரன்பு, மன்னிப்பு ஆகிய இரு சொல்லாடல்கள் குறித்து எடுத்துரைத்தார்.   

ஆண்டவரின் பிறப்புப் பெருவிழா காலத்தில், முதல் கிறிஸ்தவ மறைச்சாட்சி புனித ஸ்தேவான், தனது அரியணை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தால் ஏரோது அரசனால் கொல்லப்பட்ட மாசற்ற புனிதக் குழந்தைகள் ஆகிய மறைச்சாட்சிகளையும் நினைவுகூர்கின்றோம் என்று கூறியத் திருத்தந்தை, இம்மறைச்சாட்சிகளின் திருவழிபாடுகள், இந்நாள்களின் உலகப்போக்கு நிகழ்வுகளிலிருந்து நம்மை திசைதிருப்புகின்றன, அது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.

உண்மையில் மறைச்சாட்சி என்ற சொல்லாடல், சான்றுபகர்தல் என்று அர்த்தமாகும் என்றும், தங்களின் வாழ்வு வழியாக இயேசுவை நமக்குச் சுட்டிக்காட்டி சான்றுபகர்ந்த மறைச்சாட்சிகள் இந்த நம் காலத்திலும் எண்ணற்றவர்கள் உள்ளனர் என்றும் கூறியத் திருத்தந்தை, கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்வதால் சித்ரவதைக்குள்ளாகும் நம் சகோதரர் சகோதரிகளுக்காகச் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

நாம் சான்றுபகர்கின்றோமா? இத்தகைய வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது? என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, இதில் மறைச்சாட்சி புனித ஸ்தேவானின் வாழ்வியல் நமக்கு உதவுகின்றது என்றும், இவர் அக்கால எருசலேம் கிறிஸ்தவ சமூகத்தில் பிறரன்புப் பணிக்காகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஏழு திருத்தொண்டர்களில் ஒருவர் என திருத்தூதர் பணிகள் நூலில் (காண்க. 6:1-6) வாசிக்கிறோம் என்றும் கூறினார்.

பிறரன்பு, இறைவார்த்தை

புனித ஸ்தேவான் தன் முதல் சான்றை சொற்களில் அல்ல, மாறாக, தேவையில் இருப்போருக்குப் பணியாற்றியதில் வெளிப்படுத்தினார் எனவும், இவர் தான் உதவியவர்களுக்கு இறைவார்த்தையின் ஒளியில் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டார் எனவும் உரைத்த திருத்தந்தை, இவரது சான்று வாழ்வு, பிறரன்பு மற்றும், இறைவார்த்தையை அறிவித்தல் ஆகிய இரு கூறுகளைக் கொண்டிருந்தது என்றார். 

புனித ஸ்தேவான்
புனித ஸ்தேவான்

மன்னிப்பு

எனினும், புனித ஸ்தேவானின் மற்றுமொரு மாபெரும் சான்று, தன்னைக் கொலைசெய்தவர்களை மன்னித்ததாகும் என்றும் கூறியத் திருத்தந்தை, நாம் உண்மையிலேயே மற்றவருக்கு பிறரன்புப் பணியாற்றுகிறோமா மற்றும், இறைவார்த்தையின்படி வாழ்கிறோமா என்பதை, மன்னிப்பின்வழி அறிகிறோம் என்று எடுத்துரைத்தார்.

உண்மையில் மன்னிப்பு என்ற சொல்லாடல், மற்றவருக்கு நாம் வழங்கும் மிகப்பெரும் கொடையாகும், ஏனெனில் இயேசுவால் மன்னிக்கப்பட்ட நாம் அவருக்கு உரியவர்கள் என்றும் கூறியத் திருத்தந்தை, இந்நாள்களில் நம் மன்னிக்கும் திறன் குறித்து சிந்தித்துப் பார்ப்போம் என்று கூறினார்.   

மன்னிக்கும் திறனுடைய, நம் மனதைப் புண்படுத்தியவர்களுக்காகச் செபிக்கின்ற வலிமையை, திறந்தமனம் மற்றும், ஒப்புரவின் பாதைகளை முன்னெடுக்கவல்ல புதியதோர் இதயத்தைப் புதிதாகப் பிறந்திருக்கும் இயேசுவிடம் கேட்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

பிறரன்பு, இறைவார்த்தையில் அன்பு, மன்னிப்பு ஆகியவற்றில் வளர மறைச்சாட்சிகளின் அரசியாம் அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்றுரைத்து, தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 டிசம்பர் 2022, 13:00