தேடுதல்

கைதியிடம் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் கைதியிடம் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை: கைதிகளுக்கு கிறிஸ்மஸ் கால மன்னிப்புக்கு அழைப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணங்கள், மற்றும் பல நேரங்களில், குறிப்பாக, புனித வியாழனன்று கைதிகளின் காலடிகளைக் கழுவி அவர்களோடு தனக்குள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

மன்னிப்பால் பலனடையும் தகுதியுடன் இருக்கின்ற சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு, அரசுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மித்துவரும் கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு  மன்னிப்பு வழங்கப்படுமாறு விண்ணப்பித்து அரசுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ள நம் சகோதரர் சகோதரிகளுக்கு கிறிஸ்மஸ் பெருவிழாவின் ஓர் அடையாளமாக மன்னிப்பு வழங்கப்படுமாறும், அதன் வழியாக, பதட்டநிலைகள், அநீதிகள், மற்றும், போர்களாலான இக்காலக்கட்டம், ஆண்டவரிடமிருந்து வருகின்ற திருவருளுக்குத் திறந்தமனம் கொண்டதாக அமையும் என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதன் நோக்கம் இதுவே என, டிசம்பர் 12, இத்திங்களன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.  

கைதிகளின் காலடிகளைக் கழுவுதல்: "கடவுள் எப்போதும் மன்னிக்கிறார்"

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இரண்டாயிரமாம் மாபெரும் யூபிலி ஆண்டின்போது, கைதிகளின் யூபிலிக்காக எழுதிய 11 பக்க ஆவணத்தில், கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு உலகின் தலைவர்களுக்கு விண்ணப்பித்திருந்தார்.

அவ்வாறு விண்ணப்பித்து அறிக்கை வெளியிட்டு ஒரு வாரம் சென்று, கைதிகளின் யூபிலியின் ஒரு பகுதியாக, அத்திருத்தந்தை, அவ்வாண்டு ஜூன் மாதத்தில் உரோம் Regina Coeli வானக அரசியே மத்திய சிறைக்குச் சென்று, கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு அதனை வழங்க அதிகாரமுள்ள தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கைதியாக, கேலிப்பொருளாக, தீர்ப்பிடப்பட்ட மற்றும், கண்டனத்துக்கு உட்பட்ட இயேசுவின் பெயரால் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு விண்ணப்பிக்கிறேன் என்றும், அதனால் அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்தபின்னர் புதியதொரு வாழ்வைக் கட்டியெழுப்புவார்கள் என்றும் அத்திருத்தந்தை கூறியுள்ளார்.

அத்திருத்தந்தை, 2002ஆம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இத்தாலிய நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது இதே விண்ணப்பத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016ல் கைதிகளின் யூபிலி

கைதிகளின் காலடிகளைக் கழுவுதல்
கைதிகளின் காலடிகளைக் கழுவுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தனக்குமுன் தலைமைத்துவப் பணியாற்றிய திருத்தந்தையரின் வழியில், திருத்தூதுப் பயணங்கள், மற்றும் பல நேரங்களில், குறிப்பாக, புனித வியாழனன்று கைதிகளின் காலடிகளைக் கழுவி அவர்களோடு தனக்குள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

2016ஆம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலி ஆண்டின்போது, அவ்வாண்டு நவம்பர் 6ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட கைதிகளின் யூபிலியை முன்னிட்டு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கைதிகளுக்கு நிறைவேற்றிய திருப்பலிக்குப்பின் ஆற்றிய மூவேளை செப உரையிலும், கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு அரசுகளின் தலைவர்களுக்கு விண்ணப்பித்தார்.

தற்போது கிறிஸ்மஸ் அண்மித்துவருவதை முன்னிட்டு, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் கைதிகளுக்காக விடுத்த விண்ணப்பம் போன்றதொரு வேண்டுகோளை அரசுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2022, 14:17