இத்தாலிய இளையோர் குழுவுடன் திருத்தந்தை இத்தாலிய இளையோர் குழுவுடன் திருத்தந்தை  

இளையோரே, குழுவாக ஒன்றிணைந்து செல்லுங்கள் : திருத்தந்தை

இளையோரே, அமைதி இழந்து தவிக்கும் இவ்வுலகில் நீங்கள் அமைதியை ஏற்படுத்த அழைக்கப்படுகிறீர்கள். இதுவே உங்களை உயர்ந்த செயல்களை செய்யத் தூண்டும்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசுவின் அன்புக்குச் சான்று பகர, தனியாக அல்ல, குழுவாக ஒன்றிணைந்து செல்லுங்கள் என்று இத்தாலிய இளையோரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 15, இவ்வியாழனன்று, இத்தாலிய இளையோரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களைத் தனிமைப்படுத்தி, பிளவுபடுத்தும் சூழல்கள் நிறைந்த இவ்வுலகில் குழுவாக இணைந்திருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் என்று கூறி அனுப்பிய இயேசுவின் வழியில் நீங்களும் சீடர் நிலையிலிருந்து திருத்தூதர் நிலைக்கு மாற்றம் பெற்று அவர் பணியாற்ற அழைக்கப்படுகிறீர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய இளையோர் அலைப்பேசிகளிலேயே தங்களின் முகத்தைப் பதித்துள்ள நிலையில், மேல்நோக்கிப் பார்க்கவும், அதாவது, விண்ணினுள்ள கடவுளையும், உங்களுக்கு அருகிலிருப்போரைப் பார்க்கவும் அழைக்கப்படுகிறீர்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பார்வையும், கண்களும் இயேசுவைச் சந்தித்ததன் வழியாக அனுபவிக்கும் மகிழ்ச்சியை, உடனிருப்பை, மாற்றம் தரும் புதிய நட்பை, வாழ்க்கையின் அழகைக் கண்டறிய நம்மை அனுமதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இயேசுவுக்கு அனைவருமே முக்கியமானவர்கள், ஆனால் அவர் சிறப்பாக நேசிக்கும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பணக்காரர்கள் மற்றும் வலிமை படைத்தவர்கள் அல்ல, ஏற்கனவே பளபளப்பான பத்திரிகைகளின் அட்டைகளில் அல்லது தொலைக்காட்சியில் இருப்பவர்கள் அல்ல, ஆனால் சிறியவர்கள், ஏழைகள், மறக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், யாரும் கவலைப்படாதவர்கள் என்று விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்படிப்பட்டவர்கள்மீது உங்களின் பார்வைகள் திரும்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அமைதி இழந்து தவிக்கும் இவ்வுலகில் நீங்கள் அமைதியை ஏற்படுத்த அழைக்கப்படுகிறீர்கள். இதுதான் உங்களின் உண்மையான வலிமை என்றும் இதுவே உங்களை உயர்ந்த செயல்களை செய்யத் தூண்டும் என்று உற்சாகப்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியை விதைக்கும் உங்களின் இந்தப் பயணத்தில் துணிந்து செல்லுங்கள், ஏனெனில் நண்பராக உடன்நடக்கும் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2022, 13:48