தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை 141222 புதன் மறைக்கல்வி உரை 141222 

திருத்தந்தையின் அமைதி நாள் செய்தி: இருளான நேரத்திலும் ஒளி உள்ளது

போர் என்ற நுண்கிருமியை அழிப்பது மிகவும் கடினம், ஏனெனில் இந்த நுண்கிருமி நம் உடலுக்கு வெளியேயிருந்து அல்ல, மாறாக, பாவத்தால் கறைபட்டுள்ள மனித இதயத்திற்குள்ளிலிருந்து வெளிவருகிறது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகில் இடம்பெறும் எல்லா நெருக்கடிகளும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவேளை, அவற்றில் ஒன்றையேனும் மறக்கக்கூடாது, அதேநேரம், மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பணியாற்றவேண்டும் என்று 2023ஆம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2023ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படும் 56வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் தலைமையிலான குழு, டிசம்பர் 16, இவ்வெள்ளி காலையில் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

“எவருமே தனியாக காப்பாற்றப்பட முடியாது, கோவிட்-19க்கு எதிராக ஒன்றுசேர்ந்து போராடுவது அமைதியின் பாதைகளில் ஒன்றிணைவதாகும்” என்ற தலைப்பில் 56வது இவ்வுலக நாளுக்கென திருத்தந்தை தன் செய்தியை எழுதியுள்ளார்.

உறுதியுடன் நிலைத்திருங்கள்

“சகோதர சகோதரிகளே! இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில், திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்” என்று புனித பவுல், தெசலோனிக்கருக்கு (1தெச.5:1-2) எழுதிய திருமடல் வார்த்தைகளோடு

திருத்தந்தை தன் செய்தியைத் தொடங்கியுள்ளார்.

புனித பவுல், தெசலோனிக்க சமூகத்தை உறுதியுடன் நிலைத்திருங்கள் என்று ஊக்கப்படுத்தியிருப்பதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, நம் வாழ்க்கையை கொடுந்துயர நிகழ்வுகள் தாக்கும்போது கடவுளில் நம்பிக்கை வைக்க, திறந்த இதயங்களைக் கொண்டிருக்க அழைப்புவிடுக்கப்படுகிறோம் என்றும், இக்கடவுள், நம் பலவீனங்களில் நம்மைத் தாங்கிப் பிடிக்கிறார், மற்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்வுப் பாதையில் கனிவோடு உடன்பயணித்து நம்மை வழிநடத்துகிறார் என்றும் கூறியுள்ளார்

கோவிட்-19 பெருந்தொற்றின் இருள்

இருள்படர்ந்த நேரத்திலும் ஒளி உள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, கோவிட்-19 பெருந்தொற்று உலகின் மிக அமைதியான பகுதிகளைக்கூட அசைத்துப் பார்த்துள்ளது மற்றும், பல்வேறு வகையான எண்ணற்ற வலுவற்றநிலைகளுக்கு உட்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

 திருத்தந்தை பிரான்சிஸ் வளாகத்தில் செபிக்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ் வளாகத்தில் செபிக்கிறார்

இப்பெருந்தொற்றுக்கு முன்னர் நாம் இருந்த நிலைமை போன்று, இது பரவத்தொடங்கிய மூன்றாண்டுகளுக்குப்பின் இல்லை என்பதை மனதில் இருத்தியவர்களாய், தனிநபர்களாகவும், சமூகங்களாகவும் மாற்றம் அடைய நம்மையே நாம் எவ்வாறு அனுமதித்துள்ளோம் என்ற கேள்வியை எழுப்புவதற்கு இது சரியான காலம் எனவும், இந்த அனுபவம், நம் வாழ்வு அகராதியின் மையத்தில் “ஒன்றிணைந்து” என்ற சொல்லாடலை காக்கவேண்டியதன் அவசியத்தையும், எவருமே தனியாகக் காப்பாற்றப்பட முடியாது என்பதையும் உணரவைத்துள்ளது எனவும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மனிதர் உருவாக்கும் போர்கள்

இக்காலம், பெருந்தொற்றுக்குப்பின் நாம் நம்பியிருந்த அல்லது, எதிர்பார்த்த காலம் அல்ல என்றும், கோவிட்-19 பெருந்தொற்றின் இருள்நிறைந்த காலங்கள் முடிவுற்றன என நாம் துணிச்சலோடு நம்பியிருந்த அத்தருணத்தில், மனித சமுதாயத்திற்குமுன் பயங்கரமான புதிய பேரிடரான மற்றுமொரு போரை இவ்வுலகம் பார்த்து வருகிறது என்று அச்செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.    

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் அப்பாவி மக்களை அறுவடை செய்கிறது என்றும், அதில் நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தவிர எத்தனையோ ஆயிரம் கிலோ மீட்டருக்குத் தொலைவில் உள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி, பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, கோதுமை பற்றாக்குறை மற்றும், எரிவாயுவின் விலையேற்றம் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நம் உடல்களிலுள்ள நுண்கிருமிகளை அழிப்பதைவிட, போர் என்ற நுண்கிருமியை அழிப்பது உண்மையில் மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஏனெனில் இந்த நுண்கிருமி நம் உடலுக்கு வெளியேயிருந்து அல்ல, மாறாக, பாவத்தால் கறைபட்டுள்ள மனித இதயத்திற்குள்ளிலிருந்து வெளிவருகிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

உக்ரைன் போரின் அழிவுகள்
உக்ரைன் போரின் அழிவுகள்

எவருமே தனியாகக் காப்பாற்றப்பட முடியாது

அறநெறி, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நாம் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், தனித்துவிடப்பட்ட பிரச்சனைகள் என நாம் பார்ப்பவையும் உண்மையிலேயே ஒருவர் ஒருவரைப் பாதிக்கின்றன என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு பொதுநலன் என்ற கோணத்தில் நாம் சிந்திக்கவேண்டும் என்றும், மக்களினம் பசியால் துன்புறும் அவலம், மனித சமுதாயத்திற்கு ஒரு திறந்த காயமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்மனம்கொண்ட அனைவரும், அமைதியின் கைவினைஞர்களாக, பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அனைவருக்கும் நல்லதோர் ஆண்டாக அமைய தினமும் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுக்கொண்டு 56வது உலக அமைதி நாள் செய்தியை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2022, 14:04