தேடுதல்

தென் சூடான் திருத்தூதுப் பயண இலச்சினை தென் சூடான் திருத்தூதுப் பயண இலச்சினை  

40வது திருத்தூதுப் பயண இலச்சினை மற்றும் விருதுவாக்கு

2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ சனநாயக குடியரசிற்கு மேற்கொள்ள இருந்த திருத்தூதுப் பயணம், வரும் ஆண்டில் நடைபெற உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அனைவரும் ஒன்றாயிருக்க நான் செபிக்கின்றேன் என்ற மையக்கருத்தில் திருத்தந்தை வரும் 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் திருத்தூது பயணத்தின் இலச்சினை மற்றும் விருதுவாக்கை திருப்பீடச் செய்தித்தொடர்பகம் வெளியிட்டுள்ளது

2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ சனநாயக குடியரசிற்கு மேற்கொள்ள இருந்த திருத்தூதுப் பயணமானது திருத்தந்தையின் உடல்நிலைக் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது 2023ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மீண்டும் அத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தினை ஒட்டி வெளியிடப்பட்ட இலச்சினையில்  மஞ்சள் நிறக்கொடி,  நீல நிற திருச்சிலுவை, திருத்தந்தையின் ஆசீர் வழங்கும் உருவப்படம், குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா உருவப்படம், பூமியில் வாழும் உயிரினங்கள், போன்றவைகள்,  காங்கோ சனநாயக குடியரசினையும், வெண்புறா,  மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகள், சிலுவை மற்றும் இரண்டு கைகள் இணைந்திருப்பது தென்சூடானையும் குறிப்பதாக அமைந்துள்ளன.

காங்கோ இலச்சினை
காங்கோ இலச்சினை

காங்கோ இலச்சினை மற்றும் விருதுவாக்கு

காங்கோவின்  இலச்சினையில் உள்ள மேற்கு எல்லையானது  மாபெரும் திருத்தூதுப் பயண நிகழ்வு மற்றும் அதன் பலன்களை வரவேற்கத் திறந்த நிலையில் இருப்பதாகவும்,  சிவப்பு நிறக் கிழக்கு எல்லை அப்பகுதியில் மறைசாட்சிகளாக உயிரிழந்தவர்களையும்,  நீல நிற வடக்கு எல்லை, காங்கோ மக்களின் அமைதியையும், கொடியின் மஞ்சள் நிறம், வளமையையும், குறிக்கின்றது.

இடதுபுறத்தில் நீல நிறத் திருச்சிலுவை, அன்னை மரியா உருவம் போன்றவைகள்  அன்னை மரியா மீது காங்கோ மக்கள் கொண்டிருக்கும் பக்தி மற்றும் காங்கோ நாட்டினருக்காக மீட்பராம் கிறிஸ்துவிடம் பரிந்துபேசுவதையும், பலதரப்பட்ட வயதினரின் படங்கள் உடன்பிறந்த உறவையும் உணர்த்துகின்றன.

தென்சூடான் இலச்சினை மற்றும் விருதுவாக்கின் கூறுகள்

திருத்தந்தையின் 40வது திருத்தூதுப்பயணமாகிய காங்கோ மற்றும் தென்சூடான் பயணத்தின் நோக்கமாக  புனித யோவான் நற்செய்தி 17 ஆம் பிரிவில் இயேசுவின் வேண்டல் பகுதியில் இடம்பெறும், நாம் ஒன்றாய் இருப்பது போல அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

புறா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகள், சிலுவை, இரண்டு கைகள் ஒருவர் மற்றவரை வாழ்த்துவது போல இணைந்திருத்தல் என்பதாக தென்சூடான் இலச்சினை உள்ளது. அமைதிக்கான விருப்பத்தை குறிக்கும் வகையில் ஒர் ஆலிவ் கிளையை சுமந்து கொண்டு செல்லும் புறா, பல்வேறு பழங்குடி இனத்தவரின் நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் இரண்டு கைகள் இணைந்து கைகுலுக்கும் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2022, 15:48