திருத்தந்தை 16ஆம் பெனடிக்டுக்காக செபிக்கும் ஆசிய கத்தோலிக்கர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பெனடிக் தனது சான்றுள்ள வாழ்வால், திருஅவையை ஆசீர்வதித்து வருகின்றார் எனவும், உடல் நிலை மோசமாக இருந்தாலும் தெளிவாக, விழிப்புடன் இருக்கும் அவருக்காக இந்திய மற்றும் சீன கத்தோலிக்கர்கள் தொடர்ந்து செபித்து வருவதாக, யங்கூன் பேராயரும், FABC இன் தலைவருமான கர்தினால் சார்ல்ஸ் மாங்க் போ அவர்கள் கூறியுள்ளார்.
உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்ட திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்காக சிறப்பாக செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் தொடர்ந்து செபித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால் போ.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் பணிக்கு அவர் அளித்த வலுவான ஆதரவு, அவரது அறிவாற்றல், புத்திசாலித்தனம் ஆகியவை திருஅவைக்கு அவர் அளித்த மறக்கமுடியாத பங்களிப்புகளாகும் என்று கூறிய கர்தினால் போ அவர்கள், திருஅவையின் பாரம்பரியம் மற்றும் போதனைகளின் மேல் மிகுந்த நம்பிக்கை உடையவர் திருத்தந்தை பெனடிக்ட் என்றும் கூறியுள்ளார்
அன்னை மரியாவின் பாதுகாப்பு அவரை தொடர்ந்து குணப்படுத்தி, அதிக ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கட்டும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் போ.
மேலும், இந்தியாவின் ஹைதராபாத் பேராயர் கர்தினால் அந்தோனி பூலா அவர்கள், திருத்தந்தை பெனடிக் அவர்களுக்காகச் செபிக்கும்படி அனுப்பியச் செய்தியில் இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு அறிஞர், நல்ல போதகர், இறையியலாளர், ஆயன் இதயம் கொண்டவர் என்றும், திருஅவையின் மீது அன்பு கொண்டவர், திருத்தந்தை பதவியைத் துறக்க துணிவு கொண்டவர், என்னால் முடியவில்லை என்பதை பணிவுடன் ஏற்றுக் கொள்ளும் மனவலிமை கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்காக ஆசிய கத்தோலிக்கர்கள் தொடர்ந்து திருப்பலியிலும் நற்கருணை ஆராதனையிலும் செபித்து வருவதாகவும் கர்தினால் அந்தோணி பூலா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்