தேடுதல்

காங்கோ மக்களுக்கான திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் ஜூலை 3 - 2022 உரோம்) காங்கோ மக்களுக்கான திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் ஜூலை 3 - 2022 உரோம்) 

திருத்தந்தையின் காங்கோ மற்றும் தென்சூடான் பயண அறிவிப்பு

காங்கோ மற்றும் தென்சூடான் நாடுகளுக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் ‘அனைவரும் ஒன்றாயிருக்க நான் செபிக்கின்றேன்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

வரும் 2023ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ குடியரசு மற்றும் தென்சூடான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் டிசம்பர் 1, இவ்வியாழனன்று தெரிவித்துள்ளது.

வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கிற இந்த ஆறு நாள் பயணமானது, ‘அனைவரும் ஒன்றாயிருக்க நான் செபிக்கின்றேன்’என்பதை மையக்கருத்தாகக் கொண்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘நாம் ஒன்றாய் இருப்பது போல அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! என்ற இயேசுவின் வார்த்தைகளை மையமாகக் கொண்ட இத்திருத்தூதுப் பயணமானது அந்தந்த நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஆயர்களின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மேற்கொள்ளப்படும் பயணம் என்றும் அச்செய்தி கூறுகிறது.

ஜனவரி 31-ஆம் தேதி முதல்  பிப்ரவரி 3-ஆம் தேதி வரை காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை, தென்சூடானின் ஜூபாவிற்கும் அமைதிக்கான திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்வார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இத்திருத்தூதுப் பயணமானது, திருத்தந்தையின் உடல் நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், தனது பயணத்தின்போது, அந்நாடுகளிலுள்ள அரசியல் தலைவர்கள் சமுகத்தலைவர்கள், அருள்பணியாளர்கள், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள், இளையோர் என அனைவரையும் திருத்தந்தை சந்திக்கின்றார் எனவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.    

திருத்தூதுப் பயணத்தின் சிறப்பம்சங்கள்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுடனான உறவு,  தென்சூடானில் இடம்பெயர்ந்துள்ள மக்களுடனான சந்திப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் உடன்பிறந்த உறவிற்கான அடையாளமாக இப்பயணம் அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காங்கோ குடியரசில் மொத்தமுள்ள 9 கோடியே 23 இலட்சம் மக்களில், நான்கில் மூன்று பங்கினர் கிறிஸ்தவர்கள் என்பதும், அதில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் நாட்டின் மொத்த கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2022, 15:02