விழிப்பாயிருங்கள், தீயவன் மாறுவேடத்தில் மீண்டும் வருவான்
மேரி தெரேசா: வத்திக்கான்
கடவுள் அருளியுள்ள ஆசிர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருங்கள், மனமாற்றம் தேவையில்லை என ஒருபோதும் நினைக்காதீர்கள், மற்றும், அமைதி நிலவ எல்லா வழிகளிலும் உதவுங்கள் என்று, திருப்பீடத் தலைமையக அதிகாரிகளிடம் இவ்வியாழனன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 22, இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் பெனடிக்டன் அறையில் திருப்பீட தலைமையகத்தின் உறுப்பினர்களோடு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழு முக்கிய தலைப்புக்களில் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
ஆண்டவர் வழங்கும் அருளை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, மற்றும், மனமாற்றத்தின் பாதையில் எப்போதும் நடக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, எக்காலத்தையும்விட இக்காலக்கட்டத்தில் அமைதிக்காக அதிக அளவில் ஆவல்கொண்டுள்ள நாம், அமைதியை உருவாக்குபவர்களாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காரியங்களை எதார்த்தத்தோடு பார்ப்பதற்கு, ஏழ்மை, மற்றும் எளிமையில் இடம்பெற்றுள்ள இயேசுவின் பிறப்பு நமக்கு ஒரு பாடமாக உள்ளது என்றும், புனிதத்துவப் பாதைக்குத் தடையாக இருக்கின்ற அனைத்தையும் புறக்கணித்து, வாழ்க்கையில் இன்றியமையாத காரியங்களில் அதனை அமைக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நன்றியுணர்வு
நம் மனதிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது நன்றியுணர்வு என்றும், ஆண்டவர் தினமும் நமக்கு வழங்கும் நன்மைத்தனத்தை உணர்ந்தவர்களாய் இருக்கும்போது மட்டுமே, தீயவனை இனங்கண்டுகொள்ளலாம் என்றும் திருத்தந்தை எச்சரிக்கைவிடுத்தார்.
மனமாற்றம்
இவ்வாண்டின் நிகழ்வுகளை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் நம்மீது பொழிந்துள்ள ஆசீர்களுக்கு எல்லாவற்றுக்கும் மேலாக நாம் நன்றிசொல்லவேண்டும், எனினும், அந்த ஆசீர்களில் நம் மனமாற்றமும் ஒன்று என்பதை நாம் நம்புகிறோம் என்று கூறினார்.
மனமாற்றம், ஒருபோதும் முடிவுறாத கதையாகும், தனியாட்களாக அல்லது குழுவாக மனமாற்றம் தேவையில்லை என்று நினைப்பது மோசமான காரியமாகும், மனமாற்றம் என்பது, நம் வாழ்வில் நற்செய்தியை நடைமுறைப்படுத்துவதாகும், தீமையைத் தவிர்ப்பது என்பது அல்ல, நம்மால் முடிந்த நன்மைகளை ஆற்றுவதாகும் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
அறுபது ஆண்டுகளுக்குமுன் தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தால் தூண்டப்பட்ட மனமாற்றம், நற்செய்தியை முழுமையாகப் புரிந்துகொண்டு காலத்திற்கேற்றதாக அதனை அமைக்க முயற்சிகளை மேற்கொள்ளச் செய்தது எனவும், இதனை முழுமைபெறச் செய்வதற்கு வெகுதொலைவில் உள்ளோம் எனவும் உரைத்த திருத்தந்தை, திருஅவையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருங்கிணைந்து பயணம் என்ற நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார்.
ஒருங்கிணைந்த பயணத்தின் சவால்கள்
தீமை நிரந்தரமாக அகற்றப்பட்டுவிட்டது என்று நினைப்பது குறித்து விழிப்பாயிருக்கவேண்டும் எனவும், தங்கள் மீது முழுநம்பிக்கை வைக்கும் சோதனைகளைத் தவிர்த்து கிறிஸ்துவை எப்போதும் மையத்தில் வைக்கவேண்டும் எனவும் எச்சரிக்கைவிடுத்த திருத்தந்தை, சாத்தான்கள் எப்போதும் ஆடம்பரமாக நுழைகின்றன, தினமும் ஆன்மப் பரிசோதனை செய்வதன் வழியாக அவை குறித்து விழிப்பாயிருக்கலாம் என்று கூறினார்.
திருஅவையாகவும் நமது சில தவறுகள், நம் சோதனைகளுக்கு மத்தியில் கிறிஸ்துவை எப்போதும் மையத்தில் வைக்கவேண்டும் என ஊக்கப்படுத்திய திருத்தந்தை, மற்றவரைவிட நாம் நல்லவர், மனமாற்றம் தேவையில்லை என நினைக்கும் சோதனைகள் குறித்தும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
அமைதி
இந்நாள்களில் உக்ரைன் மற்றும், உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுவரும் பல போர்களை நினைக்கின்றோம் எனவும், போரும் வன்முறையும் எப்போதுமே பேரிடரையே கொணர்கின்றன எனவும், மதங்கள், போர்களுக்கு எரிபொருளாக இருக்கக்கூடாது எனவும், கூறியத் திருத்தந்தை, நற்செய்தி, எப்போதும் அமைதியின் நற்செய்தியாகும் எனவும், கடவுளின் பெயரால் தொடுக்கப்படும் எந்த ஒரு போரையும் அவர் புனிதம் எனக் கூறமாட்டார் எனவும் கூறினார்.
மரணம், பிரிவினை, ஆயுதமோதல்கள், மற்றும், அப்பாவிகளின் துன்பம் நிலவுகின்ற இடங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை மட்டுமே நாம் உணரமுடியும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அமைதிக் கலாச்சாரம், மக்களுக்கும் நாடுகளுக்கும் இடையே மட்டும் கட்டியெழுப்பப்படுவதில்லை, அது நம் ஒவ்வொருவரின் இதயத்திலிருந்து தொடங்கவேண்டும் என்று கூறினார்.
போர்கள், வன்முறை ஆகியவை அதிகரித்துவருவது குறித்து வேதனைப்படும் நாம், அமைதியை உருவாக்க நம்மால் உதவ முடியும் மற்றும், உதவவேண்டும் என்றும், அதற்கு, நாம் யாரோடு வாழ்கின்றோமோ அவர்கள் மீதுள்ள அனைத்துக் காழ்ப்புணர்வுகளையும், கோப உணர்வுகளையும் நம் இதயங்களிலிருந்து வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்றும் பரிந்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
போரை முடிவுக்குக்கொணரவும், அமைதியை ஏற்படுத்தவும் உண்மையிலேயே நாம் விரும்பினால், அது ஒவ்வொருவரிலிருந்தும் தொடங்கவேண்டும் மற்றும், இதயங்களிலிருந்து வெறுப்பு, மனக்கசப்பு, சீற்றம் ஆகியவற்றைக் களைந்தெறியவேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
கனிவு, இரக்கம், மன்னிப்பு
கனிவு, இரக்கம், மன்னிப்பு ஆகியவை அமைதியைக் கட்டியெழுப்ப புனித பவுல் சுட்டிக்காட்டும் மருந்துகள் என்றும், கனிவுடன் இருப்பது என்பது, ஒருவர் ஒருவரைச் சந்திக்கும்போது எப்போதும் நன்மைத்தனத்தைத் தெரிவுசெய்வதாகும் என்றும், இரக்கம் என்பது, மற்றவரும் குறையுள்ளவர்கள் என்ற உண்மையை ஏற்பதாகும் என்றும், மன்னிப்பு என்பது, குறை நிறைகளோடு புனிதர்களாக மாறுகிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் மற்றவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குவதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.
கடவுள் நம்மை தொடர்ந்து மன்னித்து நம் கால்களில் மீண்டும் நாம் ஊன்றிநிற்க வைக்கிறார் என்றும், அவர் நமக்கு மற்றொரு வாய்ப்புக் கொடுக்கிறதுபோல் நாமும் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்றும் திருத்தந்தை, திருப்பீட அதிகாரிகளிடம் கூறினார்.
நன்றியுணர்வு, மனமாற்றம், மற்றும் அமைதி ஆகியவை, கிறிஸ்மஸின் கொடைகளாக இருக்கட்டும் என வாழ்த்தி தன் உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை, திருப்பீடத் தலைமையக உறுப்பினர்களோடு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வானது பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்