புனிதத்தன்மை என்பது, கடவுளின் பேரன்பை அனுபவிப்பதாகும்
மேரி தெரேசா: வத்திக்கான்
புனிதத்தன்மை என்பது, ஒருவர், தான் கடவுளால் அன்புகூரப்படுவதையும், அவரது அன்பையும், இரக்கத்தையும் மிகுதியாய்ப் பெறுவதையும் அனுபவிக்கும் ஒரு நிலையாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 08, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.
புனிதர் அனைவர் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட இந்நவம்பர் மாதத்தில், புனிதர்கள் மற்றும், தூய வாழ்வு குறித்து தன் குறுஞ்செய்திகளில் பதிவுசெய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்தன்மை என்பது, போராட்டங்கள், மற்றும், தன்மறுப்புகளைக்கொண்ட வாழ்வுமுறை அல்ல, மாறாக அது கடவுள் நம்மீது வைத்துள்ள பேரன்பை அனுபவிப்பதாகும் என்று கூறியுள்ளார்.
திருத்தந்தை, பேராயர் ஷேவ்சுக் சந்திப்பு
மேலும், நவம்பர் 07, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடியது பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட, உக்ரைனின் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் தலைவரான பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள், திருத்தந்தை, உக்ரைன் மக்களோடு இறைவேண்டல் மற்றும், பிறரன்புப் பணிகளால் உடனிருப்பதை உணரமுடிந்தது என்று கூறியுள்ளார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்ததிலிருந்து அந்நாட்டில் போர் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து திருத்தந்தை மற்றும், திருப்பீட அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதற்காக, உக்ரைனைவிட்டு முதன் முறையாக வெளியேறியுள்ளார், பேராயர் ஷேவ்சுக்.
உக்ரைன் கத்தோலிக்கத் திருஅவை, அந்நாட்டு மக்களோடு அருகிலிருந்து ஆதரவளித்து வருகின்றது எனவும், உக்ரைனின் ஒவ்வோரு பேராலயமும், தலத்திருஅவையின் கட்டடங்களும், மக்களுக்குப் புகலிடங்களாகச் செயல்பட்டு வருகின்றன எனவும், பேராயர் ஷேவ்சுக் அவர்கள், திருத்தந்தையிடம் கூறியுள்ளார்.
உக்ரைனின் Irpin நகரில் இரஷ்யப் படைகள் வீசிய, தடைசெய்யப்பட்ட கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறியபோது, அவற்றிலிருந்து கிடைத்த துண்டுப்பகுதிகளில் ஒன்றை, இச்சந்திப்பின்போது திருத்தந்தையிடம் அளித்துள்ளார் பேராயர் ஷேவ்சுக்.
மேலும், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதியிலிருந்து இரஷ்யப் படைகளின் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்ற உக்ரைன் நகரங்களில் Irpinனும் ஒன்றாகும். இந்நகரை இரஷ்யப் படைகள் இரண்டு வாரங்களாக ஆக்ரமித்து, அந்நகரின் பாதிப் பகுதியை அழித்துவிட்டன. எனினும் அப்படைகளோடு உக்ரைன் படைகள் கடுமையாகப் போரிட்டு, இவ்வாண்டு மார்ச் 28ம் தேதி அந்நகரை மீட்டன என செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, பேராயர் ஷேவ்சுக் அவர்கள், உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து அந்நாட்டின் நிலவரம் குறித்து ஒவ்வொரு நாளும் காணொளிச் செய்தியில் பதிவுசெய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்