கான்ஸ்தாந்திநோபிள் திருஅவைக்கு திருத்தந்தை வாழ்த்து
மேரி தெரேசா: வத்திக்கான்
நவம்பர் 30, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையின் பாதுகாவலராகிய திருத்தூதர் புனித அந்திரேயாவின் விழாவை முன்னிட்டு அத்திருஅவையின் தலைவரான முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கும், அத்திருஅவை முழுவதற்கும் நல்வாழ்த்தைத் தெரிவிக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விழாவன்று கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையின் புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெறும் திருவழிபாட்டில், திருப்பீட பிரதிநிதி குழு ஒன்று பங்குபெறுவது பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கைகொள்ளும் அனைவர் மத்தியிலும் முழு ஒன்றிப்பு இடம்பெற எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களை அர்ப்பணிக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ சபைகள் மத்தியில் முழு ஒன்றிப்பு நிலவ, ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களையே அர்ப்பணிப்பது கடவுளின் திருவுளம் மட்டுமல்ல, இன்றைய உலகின் அவசரத் தேவையுமாகும் என்றும், உண்மையில் இன்றைய உலகுக்கு ஒப்புரவு, உடன்பிறந்த உணர்வு மற்றும் ஒற்றுமை ஆகியவை, பெரிய அளவில் தேவைப்படுகின்றன என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கான்ஸ்தாந்திநோபிள் மற்றும், உரோம் திருஅவைகளுக்கு இடையே பிரிவினைகள் உருவாகக் காரணமான வரலாற்று மற்றும், இறையியல் கூறுகள் குறித்து இக்காலத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது எனவும், இப்பிரிவினைகள், தூய ஆவியாரின் பணிக்குத் தடையாய் இருந்த நம் பாவச் செயல்கள் மற்றும், எண்ணங்களே காரணம் என்பதை நாம் ஏற்கவேண்டும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நாம் கடந்தகாலத்திலே வேரூன்றியிராமல், முழு ஒன்றிப்பை அடைவதற்குத் தேவையான இறைவேண்டல், மற்றும், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய அறச்செயல்கள் வழியாக, நாம் முயற்சி செய்து வருவதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, உரையாடலும் சந்திப்பும் மட்டுமே, மோதல்களைத் தவிர்க்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
படைப்பைப் பாதுகாத்தல், அனைவரின் மனித மாண்புக்கு ஆதரவளித்தல், நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கு முயற்சித்தல், அமைதியை ஊக்குவித்தல், பல்சமய உரையாடலில் ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியவற்றால், மனிதக் குடும்பத்தின் பொது நலனுக்கு இவ்விரு சபைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் திருத்தந்தை தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார்.
கான்ஸ்தாந்திநோபிள் நகரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இறந்தவர்கள், மற்றும், காயமடைந்தோருக்காகவும், இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடும் இதயங்களின் மனமாற்றத்திற்காகவும் செபிப்பதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்