தேடுதல்

உடன்பிறந்த உறவென்னும் நீரை வறண்ட மனிதவாழ்விற்கு கொடுங்கள் -திருத்தந்தை

நாகரீகம், மதம் கலாச்சாரம் போன்ற வேர்களைப் பாதிக்காதவண்ணம் உடன்பிறந்த உறவென்னும் நீர் கொண்டு வறண்ட மனித வாழ்வைச் செழிப்பாக்குங்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பானவர்களே குறைந்த அளவு மழைப்பொழிவைப் பெற்று நீண்ட காலம் உயிர்வாழக்கூடிய,  பஹ்ரைன் நாட்டின் உயிர்ச்சின்னமாகத் திகழ்கின்ற அகாசியா மரத்தின் இரகசியம் அதன் வேர்களில் உள்ளது. நிலத்துக்கு அடியில் பல டஜன் மீட்டர் கணக்கில் நீண்டு நீரை சேர்த்து வைத்து செழிப்புடன் மரங்களை வாழவைக்கும் இவ்வேர்களைப் போன்று பஹ்ரைன் முடியாட்சியும் கடந்த கால பழமையான நிலங்களின் நினைவுகளைப் போற்றுவதிலும், பல்வேறு கலாச்சார மக்கள் இணைந்து வாழ்வதிலும் சிறப்புற்றுத் திகழ்கின்றது.  வாழும் நாடு உயிருள்ள நிலம் என்றழைக்கப்படும் பழங்கால அரசான தில்முன் தன் புவியியல் நிலை, மக்களின் திறமைகள், வணிகதிறன்கள் போன்றவற்றில் மக்களிடையே பரஸ்பர வளர்ச்சிக்கானப் பாதைகளை வடிவமைத்துப் பல்வேறு மக்கள் சந்திக்கும் முக்கிய இடமாகத் திகழ்கின்றது.

கலாச்சாரம் பாரம்பரியம் நிறைந்த பஹ்ரைன்

அகாசியா மரத்தைப் போலவே 4500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பஹ்ரைனும் அதன் இனம், கலாச்சாரப் பன்முகத்தன்மை,  அமைதியான சகவாழ்வு மற்றும் மக்களின் பாரம்பரிய விருந்தோம்பல் ஆகியவற்றில் சிறப்புற்றுத் திகழ்கின்றது. இத்தகைய உயிர் நீரினால் பஹ்ரைன் நாட்டின் வேர்களான கலாச்சாரமும் பாரம்பரியமும் தொடர்ந்து ஊட்டமளிக்கப்படுகின்றன. அனைத்தையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டு வளர்ந்த நாடாக செல்வமிகு நாடாக திகழும் இத்தீவு நாடுகளில் தனிமைப்படுத்தப்படுதல் என்னும் பிரச்சனையை  சமாளிக்கும் திறன் பெற்ற பல இன மத சமூக மக்களைப் பாராட்டவேண்டும். நான் எனது என்று தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழலில், உலகளாவிய கிராமங்களாக நாடு, இனம், மதம், குழுக்கள் போன்றவை ஒன்றிணைந்து வாழ முடியும் என்பதற்கு பஹ்ரைன்  சான்று பகர்கின்றது. உலகமயமாக்கல் வேரூன்றி இருந்தாலும் விருந்தோம்பல் உடன்பிறந்த உறவு, பிறரன்பு இரக்கம் போன்றவற்றில் குறைவுபட்டும், மோதலின் அழிவு மனப்பான்மையில் விருப்பம் அதிகரித்தும் காணப்படுகின்றது.  

மரத்திற்கு நீரூற்றும் திருத்தந்தை
மரத்திற்கு நீரூற்றும் திருத்தந்தை

உடன்பிறந்த உறவின் நீர்

சக மனிதர்களின் வறண்ட வாழ்விற்கு, உடன்பிறந்த உறவின் நீரை கொண்டுவர முயற்சிப்போம். நாகரீகம், மதம் கலாச்சாரம் போன்ற வேர்களைப் பாதிக்கும் செயல்களை ஒருபோதும் செய்யாமல், வாழ்க்கையை வறண்டு போகச் செய்யும் அத்தகைய  வாய்ப்பிற்கு அனுமதியளிக்காமல் வாழ்வோம். ஒன்றிணைந்து ஒற்றுமை மற்றும் நம்பிக்கையோடு செயல்களைச் செய்து, பாலினம் தோற்றம், மொழி மதம் சமயம் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் முழுமையான உள்மன சுதந்திரம், மத சுதந்திரம்  வழிபாட்டு சுதந்திரம் பெற்று வாழ்வோம்.

வாழ்க்கை மரத்தின்  உயரம் அகலம் அதிகரிப்பது போல பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்திற்காக தொழில் முன்னேற்றத்திற்காக இங்கு புலம்பெயர்ந்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் சூழலில் உழைப்பு உணவிற்கு சமம் அதுவே அடிமைப்படுத்தப்படும் போது  விஷம் நிறைந்த உணவாக மாறிவிடும்   என்பதை உணரவேண்டும் அதிக உழைப்பு மனிதாபிமானமற்ற செயல், மனித கண்ணியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். உழைப்பு, உரிமை, ஒருங்கிணைந்த சுயவளர்ச்சி உண்மையான மனிதாபிமான சமுதாயத்தை உருவாக்க இன்றியமையாதது என்பதை உணர்ந்து,  பணிச்சூழல் பாதுகாப்பு மனித மாண்பை அனைவருக்கும் உறுதி செய்வோம்.  மக்களின் கலாச்சாரம் ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றை வளர்த்து பொது வாழ்வின் நன்மை, நாட்டின் வளர்ச்சி சமூக உற்றுமைப் போன்றவற்றை மேம்படுத்த உதவுவோம்.

பஹ்ரைன் மனிதாபிமான வளர்ச்சி

வளைகுடாவில் நிறுவப்பட்ட பெண்களுக்கான முதல் பள்ளி, அடிமைத்தன ஒழிப்பு தொழிலாளர்கள், பெண்கள், இளையோர் ஆகியோரின் சம உரிமையை  மேம்படுத்த கலங்கரை விளக்கமாக செயல்படும் பஹ்ரைனைப் பாராட்டுகின்றேன். மேலும்  புலம்பெயர்ந்தோர், சமூகவிளிம்பில் உள்ள அனைவருக்கும் மரியாதை மற்றும்  அவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தி, உண்மையான மனிதாபிமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை அளவிடுகின்றார்கள். 

வாழ்வின் மரம் சுற்றுச்சூழல்  அக்கறையையும் மனித வாழ்விற்கான பணியையும் வலியுறுத்துகின்றது. மத நம்பிக்கை மனித குலத்திற்கான ஆசீர்வாதம், உலகில் அமைதிக்கான அடித்தளம் என்பதை உணர்ந்த்து அமைதிக்காக உழைப்போம். உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள், ஒன்றிணந்து நம்மைப்பிரிக்கும் செயல்களை நிராகரித்து ஒன்றுபடுத்தும் செயல்களைக் கொண்டாடுவதிலும் அதனை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவோம் இத்தகைய உலகை உருவாக்க ஒன்றிணைந்து அயராது உழைக்கவேண்டும்.

போரல்ல அமைதியை நாடுவோம்.

"கொடூரமான செயல்கள், அச்சுறுத்தல்கள்பு மற்றும் போர், எல்லா இடங்களிலும் அழிவை விதைத்து நம்பிக்கையை அழிக்கின்றது. ஒவ்வொரு போரும் உண்மையின் மரணத்தை எழுப்புகிறது. போர் அமைதியையும் வெற்றியையும் அல்ல அனைவருக்கும் கசப்பான தோல்வியையும் துன்பத்தையும் மட்டுமே தருகின்றது. எனவே ஆயுத மோதல் முடிவுக்கு வர அமைதியைக் கட்டியெழுப்ப எல்லா இடங்களிலும் உறுதியுடன் இருப்போம். எப்போதும் இல்லாத அளவுக்கு, எல்லா இடங்களிலும், அமைதியை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். "உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றிணைந்த உலகத்திற்காக அயராது உழைக்க வேண்டும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2022, 13:07