தேடுதல்

பஹ்ரைன் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்  திருத்தந்தை பிரான்சிஸ் பஹ்ரைன் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ்  

39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்: பஹ்ரைனில் திருத்தந்தை

நவம்பர் 03, இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில், உக்ரைனிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மூன்று குடும்பங்களைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமைதி, உடன்பிறந்த உணர்வு, நாடுகளுக்கு இடையே, மதங்களுக்கு இடையே, மக்களுக்கு இடையே உரையாடல், நல்லிணக்க வாழ்வு போன்ற உயரிய பண்புகள் இந்த அவனியில் என்றென்றும் தழைத்தோங்க நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார், அவற்றுக்காக உழைத்தும் வருகிறார் என்பது உலகறிந்த உண்மை. இதே இலக்குடன், நவம்பர் 03, இவ்வியாழன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 39வது வெளிநாட்டுத் திருப்பயணமாக, வத்திக்கானிலிருந்து வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் முடியாட்சி நாட்டிற்குப் புறப்பட்டார். திருத்தந்தை ஒருவர், பஹ்ரைனுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்று பாராட்டப்படும் இத்திருத்தூதுப் பயணத்தை, அன்னை மரியிடம் அர்ப்பணிப்பதற்காக, நவம்பர் 02, இப்புதன் பிற்பகலில், உரோம் மாநகரின் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு வீற்றிருக்கும் Salus Populi Romani அதாவது உரோம் மக்களுக்கு நலமளிக்கும் அன்னை மரியா திருப்படத்தின் முன்பாக செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வெளிநாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பு, அப்பயணங்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்துச் செபிப்பதையும், அவற்றை முடித்துத் திரும்பும்போது அப்பெருங்கோவிலுக்குச் சென்று அவ்வன்னைக்கு நன்றி கூறுவதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பஹ்ரைன் நாட்டுக்குச் செல்வதற்காக, நவம்பர் 03, இவ்வியாழன், இத்தாலி நேரம் காலை 8.50 மணிக்கு, அதாவது இந்தியா-இலங்கை நேரம் பகல் 1.20 மணிக்கு வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார்.

பஹ்ரைனை நோக்கிப்  பயணித்த விமானம்
பஹ்ரைனை நோக்கிப் பயணித்த விமானம்

சாந்தா மார்த்தாவில் உக்ரைன் புலம்பெயர்ந்தோர் சந்திப்பு

இதற்குமுன்னதாக, இவ்வியாழன் காலையில் சாந்தா மார்த்தா இல்லத்தில், உக்ரைனிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மூன்று குடும்பங்களைச் சந்தித்தார் திருத்தந்தை. இந்த உக்ரைன் குடும்பங்களை இத்தாலியக் குடும்பங்கள் பராமரித்துவருகின்றன. உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சபைக் குருவின் மனைவி, 18 மற்றும், 14 வயது நிரம்பிய இரு மகன்களுடனும், முப்பது வயது நிரம்பிய தாய், தனது 4 மற்றும் 7 வயது நிரம்பிய பிள்ளைகளுடனும், 53 வயது நிரம்பிய பெண், தனது 13 வயது மாற்றுத்திறனாளி மகன் மற்றும் 73 வயது நிரம்பிய தாயுடனும் திருத்தந்தையை சந்தித்துள்ளனர்.

பஹ்ரைனுக்குப் பயணம்

இவர்களைச்  சந்தித்தபின்னர், கார்பன்டை ஆக்சைடை வெளியிடாத வகையில் அமைக்கப்பட்டுள்ள ITA இத்தாலிய விமான நிறுவனத்தின் A330 விமானத்தில் இவ்வியாழன் காலை காலை 9.40 மணிக்கு பஹ்ரைனுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். நான்கு நாள்கள் கொண்ட பஹ்ரைன் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் குறித்து சுடச்சுட செய்திகளை வெளியிடுவதற்காக தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு ஊடகவியலாளர்களையும் வாழ்த்தினார் திருத்தந்தை. 4,228 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பயணத்தின்போது, தான் வழியில் கடந்துசென்ற இத்தாலி, கிரீஸ், சைப்ரஸ், எகிப்து, ஜோர்டன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு தனது நல்வாழ்த்தையும் ஆசிரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும், அந்தந்த நாடுகளைக் கடந்துசெல்கையில் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஐந்து மணி ஐந்து நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டு,  இவ்வியாழன் பஹ்ரைன் நேரம் மாலை 4.45 மணிக்கு அவாலியின் சாஹிர் விமானத்தளம் (Sakhir Air Base ICAO: OBKH) சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பத்திரிக்கையாளர்களுடன் திருத்தந்தை
பத்திரிக்கையாளர்களுடன் திருத்தந்தை

அவாலி

அவாலிக்கு தென்மேற்கே 5.5 கிலோ மீட்டர் தூரத்தில் 2010ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாஹிர் விமானத்தளம், முக்கிய அதிகாரிகள், வெளிநாட்டு உயர் அரசு அதிகாரிகள், நாடுகளின் தலைவர்கள் ஆகியோரின் வருகைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பஹ்ரைன் அரசரும் அத்தளத்தைப் பயன்படுத்துகிறார். இங்கு ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு வான்வெளி தொழில்நுட்ப நிகழ்வில் ஆயிரக்கணக்கான வான்வெளி நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. இரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து ஜெட் விமானங்கள் இங்கு வந்து இறங்குகின்றன. மேலும், திருத்தந்தை சென்றிறங்கிய அவாலி, பஹ்ரைனின் ஏறத்தாழ மத்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள சிறிய தீவாகும். அந்நாட்டில் பெட்ரோலியம் இருப்பது இங்குதான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. 1930களில் இங்கு பஹ்ரைன் பெட்ரோலியம் நிறுவனம் நிறுவப்பட்டது. பெட்ரோலியம் சுத்தம்செய்வதற்குத் திறமைபடைத்த பல்வேறு நாடுகளின், குறிப்பாக பிலிப்பீன்ஸ் மற்றும், இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் இங்கு வேலைசெய்கின்றனர். அவாலியின் வடக்கே பஹ்ரைன் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும், தெற்கே எண்ணெய்க் கிணறுகளும், சாஹிர் பாலைவனப் பகுதியும் உள்ளன. அரேபியாவின் நமதன்னை பேராலயமும், வட அரேபியாவின் திருத்தூது நிர்வாக மையமும் அமைந்துள்ள அவாலியில் ஏறத்தாழ 1800 பேர் வாழ்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அவாலியின் விமானத்தளத்தைச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பஹ்ரைன் வாரிசு இளவரசர், பிரதமர், பஹ்ரைன் அரசரின் மூன்று மகன்கள், ஒரு பேரப்பிள்ளை ஆகியோர் வரவேற்றபோது, மரபு ஆடைகளை அணிந்திருந்த சிறார் திருத்தந்தை மீது மலர்களைத் தெளித்துக்கொண்டிருந்தனர். சிவப்புக் கம்பள விரிப்பு வழியாக நடந்துசென்று இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் பெற்றபின்னர், அவ்விமானத்தளத்தின் முக்கிய விருந்தினர் அறையில் சிறிதுநேரம் திருத்தந்தையும் அரசக்குடும்பத்தினரும் உரையாடினர். அதற்குப்பின்பு எகிப்தின் கெய்ரோவிலுள்ள சுன்னி இஸ்லாம் பிரிவின் புகழ்பெற்ற அல்-அசார் பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் பெரிய குரு Ahmed al-Tayeb அவர்களைத் தனியே சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்., மனித உடன்பிறந்த உணர்வுநிலைக்கு அழைப்புவிடுக்கும் ஏட்டில் அபு தாபியில் 2019ஆம் ஆண்டில் இவ்விருவரும் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சாஹிர் அரண்மனைக்குக் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். பஹ்ரைனின் மேற்கே, சாஹிர் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் அந்நாட்டு அரசர் ஹமது பின் இசா அல் கலிப்ஃபா அவர்களும், வாரிசு இளவரசரும், பிரதமரும் மற்ற முக்கிய அரசு பிரமுகர்களும் திருத்தந்தையை வரவேற்றனர். அந்த அரண்மனையில் பஹ்ரைன் அரசரையும் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த அரண்மனை வளாகத்தில் 21 துப்பாக்கிகள் முழங்க, அரசு மரியாதையுடன் திருத்தந்தைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதற்குப்பின்னர், அந்த சாஹிர் அரண்மனையில் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்தார். அவர்களுக்கு ஆற்றும் உரையோடு பஹ்ரைன் நாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் முடிவடைகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2022, 14:36