பெண்கள் மீதான வன்முறை கடவுளுக்கு எதிரான குற்றம் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
பெண்கள் மீதான வன்முறை மற்றும் சுரண்டல்கள் கடவுளுக்கு எதிராகச் செய்யும் குற்றச் செயல்கள் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 25 வெள்ளி, உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு டுவிட்டர் குறுஞ்செய்தி வழியாக தனது கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்துள்ள திருத்தந்தை, பெண்கள் மீதான வன்முறை மற்றும் சுரண்டல் வெறும் தவறு மட்டுமல்ல மாறாக, கடவுள் இவ்வுலகிற்கு பெண்கள் வழியாக வழங்க விரும்பும் நல்லிணக்கத்தையும், அழகையும் அழிக்கும் குற்றங்களாகும் என்றும் கூறியுள்ளார்.
பெண்களை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றித் தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வரும் திருத்தந்தை, உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளைக் கொண்டாடும் நாம், பெண்களை எப்படி நடத்துகிறோம் என்பதன் வழியாக நமது மனிதநேயம் அளவிடப்படுகிறது என்பதையும் நினைவூட்டுகின்றார்
ஒரு பெண்ணை தவறாக நடத்துவது கடவுளுக்கு எதிரான குற்றம் என்று வலியுறுத்தி, பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டு சுரண்டல் மற்றும் வன்முறைக்கு ஆளாகும் அனைத்துப் பெண்களுக்காகவும் செபிப்பதாகவும் கூறியுள்ளார்.
1981 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் இந்நாளானது, 1960 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சியாளரின் உத்தரவின் பேரில் கொடூரமாக கொல்லப்பட்ட, டொமினிகன் குடியரசின் அரசியல் ஆர்வலர்களான மிராபல் சகோதரிகள் மூவரைக் கௌரவிக்கின்றது.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கும் அகற்றுவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்நாள், விழிப்புணர்வை அதிகரிக்கவும், கலந்துரையாடவும், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விவாதத்திற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கவும், உருவாக்கவும் உலகளாவிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கிறது.
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவரது சொந்த குடும்பத்தில் உள்ள ஒருவரால் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படுவதாக போதைப்பொருள் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரம், அறிமுகமான நம்பகமான நபர்களால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது, பாலின அடிப்படையிலான வன்முறையின் தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றாகும் என்பதை எடுத்துரைக்கின்றது.
பெண்களின் குரல்களை எழுப்புவதற்கும், குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீது சுமத்தப்படும் அனைத்து விதமான செயல்கள் போன்றவற்றைக் கண்டிப்பதற்கும் கடைபிடிக்கப்படும் இந்நாள் COVID-19 பெருந்தொற்றுக் காலத்திற்குப்பின், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும், குறிப்பாக குடும்ப வன்முறைகளும் தீவிரமடைந்துள்ளதையும் அறிவுறுத்துகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்