தேடுதல்

Nepomuk பாப்பிறை கல்லூரிக் குழுமம் Nepomuk பாப்பிறை கல்லூரிக் குழுமம் 

திருத்தந்தை: அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்படுங்கள்

உரோம், Nepomuk பாப்பிறை கல்லூரியில், தற்போது ஆப்ரிக்கா, ஆசியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்கியிருப்பது, அதன் பன்னாட்டுத்தன்மையைக் காட்டுகின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

தங்களின் இறையழைத்தல் மற்றும், மறைப்பணிக்குப் பிரமாணிக்கமாக இருக்கும்வண்ணம், முடியாட்சியின் கிறிஸ்தவத்திற்கெதிரான கொள்கைளுக்கு, துணிச்சலுடன் மறுப்புதெரிவித்த பல அருள்பணியாளர்கள் மற்றும், ஆயர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செக் குடியரசின் அருள்பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

செக் குடியரசு, மற்றும் சுலோவாக் குடியரசின், அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் தங்கி படிப்பதற்கென்று உரோம் நகரில் ஆரம்பிக்கப்பட்ட Nepomuk (செக் மொழியில் Nepomuceno) பாப்பிறை கல்லூரியின் ஏறத்தாழ ஐம்பது பேரை, வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் நவம்பர் 10, இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அக்கல்லூரியின் பாதுகாவலரும், மறைச்சாட்சியுமான Nepomukவின் புனித யோவான் பற்றிய சிந்தனைகளை முதலில் கூற விரும்புவதாகத் தெரிவித்தார்.

Nepomukவின் புனித யோவான்

ஒப்புரவு அருளடையாளத்தின் இரகசியத்தை அறிய விரும்பிய அரசருக்கு மறுப்பு தெரிவித்து, கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் தனது பிரமாணிக்கத்தை உறுதிப்படுத்தியதால் Nepomukவின் புனித யோவான் கொலைசெய்யப்பட்டுள்ளது, வரலாற்றில் பல்வேறு சர்வாதிகார ஆட்சிகளின்கீழ் பல அருள்பணியாளர்கள் மற்றும், ஆயர்கள், மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்டுள்ளதை நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை, கூறியுள்ளார்.

14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Nepomukவின் புனித யோவான் (1345–20மார்ச் 1393) அவர்கள்,   பொகேமியாவின் அரசிக்கு ஆன்மிக ஆலோசகராகப் பணியாற்றியவர். இவர் ஒப்புரவு அருளடையாளத்தின் இரகசியத்தை வெளியிட மறுத்ததால் பொகேமியாவின் அரசர் நான்காம் வென்சஸ்லாசால் கொலைசெய்யப்பட்டார். இப்புனிதர் முதலில் Vltava ஆற்றில் முதலில் வீசப்பட்டு, பின்னர் தலைவெட்டப்பட்டு உயிரிழந்தார். இவர், ஒப்புரவு அருளடையாளத்தின் இரகசியத்திற்காக உயிரிழந்த முதல் மறைச்சாட்சி என்று போற்றப்படுகிறார்.

துணிச்சல், மற்றும், நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருந்த இப்புனிதரின் வாழ்வியல் போதனை, இக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பாவுக்கும், உலகின் அனைத்துப் பகுதிகளுக்குமே இன்று அதிகம் தேவைப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்திக்கு ஆகட்டும் என்பதை உறுதிசெய்யும்பொருட்டு, எக்காலத்தையும்விட இக்காலத்தில், ஒரு கிறிஸ்தவர், குறிப்பாக, திருஅவையின் திருப்பணிகளை நிறைவேற்றுகின்றவர், உலகின் சக்திகளுக்கு மறுப்புச்சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.   

NeNepomukவின் புனித யோவான்
NeNepomukவின் புனித யோவான்

Nepomukவின் புனித யோவானின் சான்று வாழ்வு, எவ்வித அரசியல் அதிகாரத்தையும்விட, தவிர்க்கமுடியாத மாண்பைக் கொண்டிருக்கும் மனிதருக்கும், மனசாட்சியின் குரலுக்குcd முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, இப்புனிதர் பாலங்களின் பாதுகாவலர் என்பது குறித்த தன் எண்ணங்களை எடுத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

Nepomukவின் புனித யோவான் பாலங்களின் பாதுகாவலர்

இப்புனிதர், தலைவெட்டப்படுவதற்குமுன்பு, பிராக் நகரின் சார்லஸ் பாலத்திலிருந்து Vltava ஆற்றில் வீசப்பட்டார் என்ற நிகழ்வு, பிரிவினைகள், ஒதுங்கியிருத்தல் புரிந்துகொள்ளாமை ஆகியவை நிலவும் சூழல்களில், உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்பவேண்டும் என்றும், எதிர்ப்புத் தெரிவிக்கும் பல்வேறு குழுக்களுக்கிடையே, சந்திப்பு, மற்றும், உரையாடலின் தாழ்மையான மற்றும், துணிவுள்ள கருவிகளாக, நாம் செயல்படவேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

செக் குடியரசின் அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவ மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட Nepomuk பாப்பிறை கல்லூரியில், தற்போது ஆப்ரிக்கா மற்றும் ஆசியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்கியிருப்பது, அதன் பன்னாட்டுத்தன்மையைக் குறித்துக் காட்டுகின்றது என்றும், இது, சந்திப்பு, ஒருவர் ஒருவரின் சிறப்புப்பண்பைக் கிரகித்தல், மற்றும், பொதுவான சமுதாய உணர்வு ஆகியவற்றின் கலாச்சாரத்திற்குப் பணியாளர்களாக, உறவுப்பாலங்களாகச் சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2022, 14:57