இஸ்ரேல்-பாலஸ்தீனாவுக்கு இடையே உரையாடல் இடம்பெற அழைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவுக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துவரும்வேளை, அப்பகுதியில் ஒரு நீடித்த நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு, ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வழியமைக்கும் உரையாடலின் பாதைகளைத் தெரிவுசெய்யுமாறு அவ்விரு நாடுகளையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 27, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், இவ்வாறு இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீன அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, இஸ்ரயேலர் மற்றும், பாலஸ்தீனியர்களுக்கு இடையே அதிகரித்துவரும் வன்முறை குறித்த செய்திகளை கவலையோடு வாசித்து வருவதாகத் தெரிவித்த திருத்தந்தை, கடந்த புதனன்று புனித பூமியில் நடைபெற்ற இரு கோழைத்தனமான வன்முறைகளை நினைவுகூர்ந்தார்.
கடந்த புதனன்று எருசலேமில் இடம்பெற்ற தாக்குதல்களில் 16 வயது நிரம்பிய யூத மாணவரும், அதே நாளில் Nablusலில் இடம்பெற்ற தாக்குதல்களில் 14 வயது நிரம்பிய பாலஸ்தீனியச் சிறுவனும் இறந்துள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, இவற்றில் உயிரிழந்த இவ்விளையோர், அவர்களின் குடும்பங்கள், குறிப்பாக, அவர்களின் அன்னையர்க்காகச் செபிப்போம் என்று திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
வன்முறை, இளையோரின் வாழ்வை நிலைகுலையச் செய்கிறது, மற்றும், அமைதிக்கான நம்பிக்கையை பலவீனப்படுத்துகின்றது என்றுரைத்து, அது வருங்காலத்தை கொலைசெய்கிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
புனித பூமியில் அமைதி நிலவவேண்டுமெனில், உரையாடல் மற்றும், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகளைத் தேடவேண்டியது இன்றியமையாதது என்பதை தங்களின் உள்ளங்களில் இருத்தவேண்டும் என, இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீன அதிகாரிகளிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்