திறந்த மனதோடு மற்றவர் பேசுவதற்குச் செவிகொடுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருஅவையில் ஒன்றிணைந்த மக்களாக, ஒரே பாதையில் செல்வதற்கு ஒன்றிணைந்த பயணம் என்ற உணர்வு நம்மில் வேரூன்றப்படவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய கத்தோலிக்க கழகத்தினரின் 8வது மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் உரோம் நகரில் நடைபெற்ற இம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய தலைவர்களுக்கு தன் வாழ்த்தைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்க எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதில் அளிப்பதற்காக, கர்தினால் Eduardo Pironio அவர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குமுன் இக்கத்தோலிக்க கழகத்தை உருவாக்கினார் என்று கூறியுள்ளார்.
இன்றைய உலகை நோக்கும்போது சில இடங்களில் தனிமனிதப் போக்கு உயிரோட்டமாக உள்ளது எனவும், இது, உலகளாவிய உடன்பிறந்த உணர்வைக் குறைத்து, நாடுகள் மற்றும், மக்களுக்கு இடையே வன்முறை உருவாக இட்டுச்செல்கின்றது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளப்படும் இன்னல்கள், மற்றும், முரண்பாடுகளைச் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பது நம்பிக்கையே என்று கர்தினால் Pironio அவர்கள் கூறியிருப்பதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மூன்றாம் மில்லென்யத் திருஅவையில் கடவுள் எதிர்பார்க்கும் ஒன்றிணைந்த பயணம் மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நாற்காலியில் அமர்ந்திருக்கின்ற, கூட்டங்களில் உரையாற்றுகின்ற, கட்டுரைகளை எழுதுகின்ற தலைவர்களாக இல்லாமல், அனைவரும் பேசுவதற்குச் செவிமடுப்பவர்களாக இருக்குமாறும், அக்கழகத்தின் தலைவர்களிடம் கூறியத் திருத்தந்தை, காலத்தின் அறிகுறிகளைப் பார்த்து அவற்றுக்குச் செவிசாய்ப்பவர்களாக திருஅவை விளங்கவேண்டும், இதில் அன்னை மரியாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்