கனி தரும் மரத்தின் வேர்கள் இளையோர் - திருத்தந்தை
மெரினா ராஜ்- வத்திக்கான்
செல்வத்தைச் சேர்க்கவேண்டும் என்ற பேராசையில் இப்பூமியின் வளங்கள் அத்துமீறி அழிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இளையோர் போராடவேண்டும் என்று, ஆப்ரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழக இளையோரோடு, இணையதளம் வழியாக நடத்திய சந்திப்பின்போது கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 01, இச்செவ்வாயன்று ஆப்ரிக்கக் கண்டத்தின் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக இளையோர் பிரதிநிதிகளுடன் இணையதளம் வழியாக உரையாடலை மேற்கொண்ட திருத்தந்தை, இளையோர் கனவுகாண்பதை நிறுத்தும்போது, அவர்கள் வாழ்கின்ற நாட்டில் வளர்ச்சி குன்றும் எனக் கூறியுள்ளார்.
இளையோர், வேர்கள் என்றும், அவ்விளையோரைப் பொறுத்தே வேர்களின் வலிமை மற்றும் நாட்டின் வளமை இருக்கும் என்றும், தனித்தனி வேர்களாக இல்லாமல் ஒன்றிணைந்து கனிகளை அதிகமாகத் தரும் மரங்களாக மாறவேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ள்ளார்.
ஆப்ரிக்காவில் உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புதல் குறித்து மேற்கொண்ட இவ்வுரையாடலில் கடினமான வரலாற்றை தங்கள் இரத்தத்தால் கட்டியெழுப்பிய மக்களைச் சார்ந்தவர்கள் ஆப்ரிக்க இளையோர் என்றும், இத்தகைய வரலாற்றை தங்களது வாழ்வு மற்றும் மனமுதிர்ச்சியின் ஒரு பகுதியாக கருதவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
உற்பத்தி மற்றும் உற்பத்தியினால் கிடைக்கும் பலன் இரண்டிற்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மறைய, உலகின் தெற்கு மற்றும் வடக்கில் வளங்கள் ஒருவர் மற்றவரால் சுரண்டப்படாமல் இருக்க உறவுப் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும், இதற்கு இளையோரின் பங்களிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
வரலாற்றின் சுமை, அது தரும் நன்மை தீமை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடியதே மனமுதிர்ச்சி என்று கூறிய திருத்தந்தை, ஆப்ரிக்காவை வளரவிடாமல் தடுக்கும் சுரண்டல், அடிமைத்தனம் போன்றவற்றிலிருந்து மீண்டு வர, ஆயுத விற்பனையை நிறுத்தவேண்டும் எனவும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் இளையோர் பங்களிப்பு அதிகமாக இருக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
குணப்படுத்தும் பணிகள், செழுமையான நற்செய்தி கருத்துக்கள், ஆன்மீகச் செயல்பாடுகள் என பலவற்றைக் கொண்டுத் திகழும் ஆப்ரிக்காவில் எந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதை இதயத்தின் வழியாகக் காணவேண்டும் எனவும், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரவர் சுதந்திரம் பறிக்கப்படாதவாறு செயல்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
பாரபட்சமின்றி உண்மையான சுதந்திரத்தை அடைய இளையோர் அதிகமாக உழைக்கவேண்டும் எனவும், உலகை ஆதிக்கம் செய்ய விரும்பும் மக்கள் இயற்கையை சுரண்டுவதால் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன எனவும் கூறியுள்ள திருத்தந்தை ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் எந்த செயலையும் ஆதரிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இளையோர் சில நேரங்களில் விழிப்புணர்வு இல்லாமலும் சில நேரங்களில் அதிக விழிப்புணர்வுடனும் இருக்கின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை நாட்டின் முன்னேற்றத்திற்காக இளையோர் கனவு காணவேண்டும் என்றும் துணிவுடன் செயல்பட மூத்தோர் மற்றும் அறிவாளிகளின் வழிகாட்டுதல்களைப் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்