தேடுதல்

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ 

திருத்தந்தை: உலகில், உக்ரைனில் அமைதி நிலவ செபிப்போம்

கிறிஸ்தவ சபைகள் அனைத்தும், விரைவில் முழு ஒன்றிப்பை அனுபவிக்க, முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 30, இப்புதனன்று, சீமோன் பேதுருவின் சகோதரரும், கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையின் பாதுகாவலருமாகிய திருத்தூதர் புனித அந்திரேயாவின் விழாவைச் சிறப்பிக்கிறோம், இவரைப் பாதுகாவலராகக் கொண்டிருக்கின்ற கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையின் தலைவரும், எனது அன்புச் சகோதரருமான முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கும், அத்திருஅவை முழுவதற்கும் எனது நல்வாழ்த்தைத் தெரிவிக்கிறேன் என்று இப்புதனன்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின்னர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ சபைகள் அனைத்தும், விரைவில் முழு ஒன்றிப்பை அனுபவிக்க, முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகமனைத்தும், குறிப்பாக, நம் மனங்களிலும், செபங்களிலும் எப்போதும் இருக்கின்ற கடுந்துன்பத்தை எதிர்கொள்ளும் அன்புமிக்க உக்ரைனும் அமைதியை அனுபவிக்கவும், உடன்பிறப்புக்களான திருத்தூதர்கள் பேதுரு, மற்றும் அந்திரேயாவின் பரிந்துரையை வேண்டுவோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மரபுப்படி இவ்விழாவன்று திருப்பீட பிரதிநிதி குழு ஒன்று கான்ஸ்தாந்திநோபிள் சென்றுள்ளது என்றும், ஜூன் 29ம் தேதி புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையின் பிரதிநிதிகள் குழு ஒன்று வத்திக்கானுக்கு வருகைதரும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2022, 15:07