தேடுதல்

மறைந்த ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்களுடன் திருத்தந்தை மறைந்த ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்களுடன் திருத்தந்தை  

பேராயர் கிறிஸ்சோஸ்தோமோசின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள் ஒரு தொலைநோக்குப் பார்வைகொண்ட போதகர், உரையாடலின் மனிதர் மற்றும் அமைதியை அன்பு கூர்பவர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மறைந்த ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள், உரையாடலின் தந்தை என்றும் அமைதியை விரும்பியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

81 வயது நிரம்பிய சைப்ரசின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள், நவம்பர் 07, இத்திங்களன்று இறைபதம் சேர்ந்ததையொட்டி, நவம்பர் 9, இப்புதனன்று தனது பொது மறைக்கல்வி உரையின்போது நினைவுகூர்ந்து இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது ஆன்மா நிறையமைதி அடைய இறைவேண்டல் செய்யுமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள் ஒரு தொலைநோக்குப் பார்வைகொண்ட  போதகர், உரையாடலின் மனிதர் மற்றும் அமைதியை அன்புகூர்ந்தவர், நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்த உழைத்தவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  டிசம்பர் 2021-இல் தான் சைப்ரஸ் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அவருடன் மேற்கொண்ட சகோதர சந்திப்புகளை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்தார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கும் சைப்ரஸின் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையிலான உடன்பிறந்த உணர்வு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சைப்ரஸ் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் வழியாக மேலும் வலிமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் சபையும், பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியில்,  ஆர்த்தடாக்ஸ் சபை மீதான அவரது அன்பை நினைவுகூர்ந்துள்ளதுடன், அவர் எழுப்பிய மற்றும் திறக்கப்பட்ட அல்லது பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்ட பல கோவில்கள் அவரது அர்ப்பண வாழ்விற்குச்  சான்று பகர்கின்றன என்று பதிவு செய்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2022, 14:32