தேடுதல்

மூவேளை செப உரை 271122 மூவேளை செப உரை 271122 

வெள்ளப்பெருக்கு, பாலியல் வன்செயலால் துயருறுவோருக்காக செபம்

போர், மற்றும், வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், அமைதி, மற்றும், உரையாடலுக்கு ஆதரவாக இருப்பதிலும் சோர்வடையவேண்டாம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 27, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், இஸ்கியா தீவில் வெள்ளத்தால் துயருறும் மக்கள், உலகில் பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகும் பெண்கள், மற்றும், கடுந்துன்பங்களை எதிர்கொள்ளும் உக்ரேனியர்களை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் இஸ்கியா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும், நிலச்சரிவுகளால் இருவர் இறந்தும் 11 பேர் காணாமலும் போயுள்ளவேளை, அத்தீவில் துன்புறும் மக்கள், மற்றும், துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகச் செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயலைக் கண்டித்து, நவம்பர் 27, இஞ்ஞாயிறு காலையில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டோரை வாழ்த்திய திருத்தந்தை, இவ்வன்செயல் எல்லா இடங்களிலும் இடம்பெறுவது கவலைதருகின்றது என்றும், இவ்வன்செயல், போரின் ஆயுதமாகக்கூட பயன்படுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.   

மேலும், மனந்தளராமல், போர், மற்றும், வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள், மற்றும், அமைதி, மற்றும், உரையாடலுக்கு ஆதரவாக இருங்கள் என அனைவரையும் ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 26, இச்சனிக்கிழமையன்று Holodomor உக்ரைன் இனப்படுகொலை நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து, தற்போது போரினால் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக இறைவேண்டல் செய்வோம் எனக் கேட்டுக்கொண்டார்.

வீடற்ற Burkhard Scheffler மரணம்

மூன்று நாள்களுக்குமுன்பு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தின் தூண்கள் அமைந்துள்ள பகுதியில் குளிரினால் இறந்த வீடற்ற Burkhard Scheffler அவர்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இம்மூவேளை செப உரையின்போது அவ்வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு குழுக்களை, குறிப்பாக, உரோம் நகரில் நடைபெறும் பன்னாட்டு கத்தோலிக்க கழகத்தின் (FIAC) 8வது மாநாட்டில் கலந்துகொள்வோரை வாழ்த்தினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2022, 12:45