தேடுதல்

ஜாவா தீவில் நிலநடுக்கம் ஜாவா தீவில் நிலநடுக்கம் 

ஜாவாவில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக செபம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நவம்பர் 21, இத்திங்களன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர், ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டோருக்காவும், உலகில், குறிப்பாக, போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் அமைதி நிலவவும் அனைவரும் செபிக்குமாறு இப்புதனன்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

நவம்பர் 23, இப்புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் ஆன்மிக ஆறுதல் குறித்து பொது மறைக்கல்வியுரையை வழங்கியபின்னர், உலகெங்கும் பல்வேறு நிலைகளில் துன்புறும் மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டி, மக்களுக்கும், நாடுகளுக்கும் இடையே நல்லிணக்கம் மற்றும், உடன்பிறந்த உணர்வை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பது குறித்தும் இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று உகாண்டா நாட்டில், அருளாளராகப் புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கொம்போனி மறைப்பணி சபையின் அருள்பணியாளரும், மருத்துவருமான Giuseppe Ambrosoli அவர்கள் பற்றியும், நவம்பர் 21, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட மீன்பிடித் தொழில் மற்றும், நீர் மேலாண்மை உலக நாள் பற்றியும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.

ஜாவாவில் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு இறைவேண்டல்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நவம்பர் 21, இத்திங்களன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர், ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர், மற்றும், மீட்புப் பணியாளர்கள், அவசரகால உதவிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றனர்.

இப்பேரிடரில் இறந்தவர்கள் மற்றும், காயமடைந்தோருக்காக இறைவேண்டல் செய்வதாகவும், அன்புநிறைந்த அந்நாட்டு மக்களுடன் தன் உடனிருப்பைத் தெரிவிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து

கத்தாரில் நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்கள், இரசிகர்கள், மற்றும் பார்வையாளர்களுக்கு தன் வாழ்த்தை தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இம்முக்கியமான நிகழ்வு, நாடுகள் மத்தியில் சந்திப்பு மற்றும், நல்லிணக்கம், மக்கள் மத்தியில் உடன்பிறந்த உணர்வு மற்றும் அமைதியைப் பேணி வளர்ப்பதாக இருக்கட்டும் என்ற தன் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.  

இவ்வுலக கால்பந்து விளையாட்டு போட்டி, வருகிற டிசம்பர் 18ம் தேதி நிறைவடையும்.  

உக்ரைன், உலகில் அமைதி

உலகெங்கும் இடம்பெறும் அனைத்துப் போர்களும் முடிவுறவும், உலகில் அமைதி நிலவவும் செபிப்போம் என்றுரைத்த திருத்தந்தை, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அதிபரான ஸ்டாலினால், உக்ரைனில் 1932ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டுவரை பட்டினியால் மடிந்த, Holodomorன் பயங்கரமான இனப்படுகொலை இடம்பெற்றதன் ஆண்டு நிறைவு, நவம்பர் 19, இச்சனிக்கிழமையன்று நினைவுகூரப்பட்டதையும் குறிப்பிட்டார். அதில் இறந்தவர்கள் மற்றும், உக்ரைனில் துன்புறும் மக்களுக்காகச் செபிப்போம் எனவும் திருத்தந்தை கூறினார்.  

அருளாளர் Giuseppe Ambrosoli

நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று உகாண்டா நாட்டின் Kalongoவில், அருளாளராகப் புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கொம்போனி மறைப்பணி சபையின் அருள்பணியாளரும், மருத்துவருமான Giuseppe Ambrosoli அவர்கள், இத்தாலியின் கோமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். 1987ஆம் ஆண்டில் உகாண்டாவில் இறந்த இவர், நோயாளிகளில் கிறிஸ்துவின் முகத்தைப் பார்த்து அவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தவர். இவரின் மிகச்சிறந்த சான்று வாழ்வு, திருஅவையில் தகுதியானவர்களாக வாழ நமக்கு உதவட்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மீன்பிடித் தொழில், நீர் மேலாண்மை உலக நாள்

மீனவர்கள், தங்களின் தொழில் வழியாக, உலகில் வறுமை குறைக்கப்படவும், உணவுப் பாதுகாப்புக்கும் சத்துணவுக்கும் உதவி வருகின்றவேளை, அவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும், இதன் வழியாக, மீன்பிடித் தொழில் மற்றும், நீர் மேலாண்மையின் நீடித்த நிலையான வளர்ச்சிப் பேணப்படும் என்று, மீன்பிடித் தொழில், மற்றும், நீர் மேலாண்மை உலக நாள் வலியுறுத்துகின்றது எனவும், திருத்தந்தை இப்புதனன்று கூறினார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2022, 13:25