வீடற்ற ஜெர்மன் மனிதரின் இறப்பிற்கு திருத்தந்தை இரங்கல் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
வீடற்ற ஜெர்மன் மனிதரின் இறப்பிற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து, உலகில் இது போல் வீடின்றி துன்புறும் அனைவருக்காக செபிக்கும்படி உலக மக்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
நவம்பர் 25 வெள்ளி உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Burkhard Scheffler என்பவரின் இறப்பிற்காக வெளியிட்ட இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வீடற்ற Burkhard Scheffler ஆன்மா இறைவனில் நிறையமைதி பெறவும், உரோம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் வீடற்ற மக்களனைவரின் நலனுக்காகவும் செபிக்க திருத்தந்தை உலக மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1961 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த Burkhard Scheffler உரோம் தெருக்களில் வாழ்ந்து வந்தவர் எனவும், தொண்டு மற்றும் சேவைக்கான பேராயத்தின் உதவி முயற்சிகளால் பராமரிக்கப்பட்டவர் எனவும் திருப்பீடத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில இரவுகளில் குளிர் மற்றும் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்ட Burkhard Scheffler உடல்நிலை பலவீனமாகி, இறந்துள்ளார் எனவும் திருத்தந்தையின் பெயரில், Scheffler ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற, பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Konrad Krajewski திருப்பலி நிறைவேற்றினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்