தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை: பிரிவினைகளைக் களைய உரையாடல் ஒன்றே வழி

ஆயர் பேரவைகள், ஒற்றுமையின் அடையாளமாக, அதற்கு உதவுவதற்காக உள்ள நிறுவனங்கள். இயேசு ஆயர்கள் பேரவைகளை உருவாக்கவில்லை, மாறாக அவர் ஆயர்களை உருவாக்கினார் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிளவுபட்டு இருப்பது, கத்தோலிக்கப் பண்பு அல்ல, மாறாக, கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் நல்லிணக்கத்துடன் வாழ்கின்ற வழிகளை எப்போதும் நாம் தேடவேண்டும்   என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

1909ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயேசு சபையினரால் தொடங்கப்பட்ட "America Magazine" என்ற இதழின் முன்னாள், இன்னாள் தலைமை ஆசிரியர்களான இயேசு சபை அருள்பணியாளர்கள் Matt Malone, Sam Sawyer ஆகியோர் உட்பட அவ்விதழின் ஐந்து பிரதிநிதிகள், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, பல்வேறு தலைப்புக்களில் நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்நேர்காணலில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நிலவரம், அந்நாட்டுத் திருஅவை சார்ந்த விவகாரங்கள், உக்ரைன் போர், இனப்பாகுபாடு, சீனாவோடு வத்திக்கானுக்கு உள்ள உறவு, பெண்களுக்கு அருள்பணித்துவ திருப்பொழிவு செய்வது குறித்த திருஅவையின் போதனை, திருத்தந்தையின் தலைமைத்துவம் என பல்வேறு தலைப்புக்களில் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

1909ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் அவ்விதழுக்கு முதன் முறையாக திருத்தந்தை அளித்துள்ள இந்நேர்காணல், நவம்பர் 28, இத்திங்களன்று  America என்ற இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது. மேலும், இந்நேர்காணல், அவ்விதழின் 2023ஆம் ஆண்டு சனவரி மாதப் பதிப்பில் பிரசுரமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

மகிழ்வோடு உள்ளேன்

திருஅவையின் தலைமைத்துவப் பணியில் எப்போதும் அமைதி, மற்றும் மகிழ்வோடு இருப்பதற்கு காரணம் என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, மக்களோடு எப்போதும் இருப்பதும், சில இக்கட்டான சூழல்கள் உட்பட எப்போதும் கடவுள் என்னுடன் இருந்து என் வாழ்வுப் பாதையை வழிநடத்துகிறார் என்ற உணர்வும், எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றது என்று கூறியுள்ளார்.

கடவுளின் இந்த உடனிருப்பு, ஒருவர் வாழ்வில் தனியாக நடப்பதில்லை என்பதற்கு எப்போதுமே உறுதி வழங்குகிறது என்றும், நவம்பர் 22, இச்செவ்வாயன்று வழங்கிய இந்நேர்காணலில் திருத்தந்தை கூறியுள்ளார்.

பிளவுபட்டு இருப்பது கத்தோலிக்கம் அல்ல

 

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் வாழ்வில், ஏன், அந்நாட்டுத் திருஅவையிலும்கூட பிரிவினைகள் வளர்ந்துவருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, சமுதாயத்தில், குறிப்பாக, திருஅவைக்குள்ளும் கருத்தியல்ரீதியாக பிரிவினை இருப்பதன் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கைவிடுத்த அதேவேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயமும், கருத்தியல் கத்தோலிக்க குழுக்கள் சிலவற்றைக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். 

பிளவுபட்டு இருப்பது கத்தோலிக்கம் அல்ல என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்ட திருத்தந்தை, கத்தோலிக்கர் ஒருவர், இது அல்லது அது எனச் சிந்திக்க முடியாது, ஏனெனில் இது எல்லாவற்றையும் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்றும், இயேசு, தன் சமகாலத்து யூதர்கள் மத்தியில் பரிசேயர்கள், சதுசேயர்கள், தீவிரவாதிகள், போன்றோர்க்கிடையே நிலவிய பிரிவினைகளைக் கடந்து, பேறுபெற்றோர் யார் என்பதைப் பரிந்துரைத்தார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைகள் அதிகரிக்க அதிகரிக்க, ஒருவர் கத்தோலிக்க உணர்வை இழக்கின்றார் என்றும், இது பாகுபாட்டு உணர்வுக்கு இட்டுச்செல்லும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

ஆயர்கள், ஆயர் பேரவைகள்

கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும், அறநெறிகள் சார்ந்த விவகாரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைக்கும், அந்நாட்டுக் கத்தோலிக்கருக்கும் இடையே இடைவெளி வளர்ந்து வருவது குறித்து கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இதில் ஆயர்கள் பேரவை என்பதைவிட தனிப்பட்ட ஆயர்களின் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஆயர் பேரவைகள், ஒற்றுமையின் அடையாளமாக, அதற்கு உதவுவதற்காக உள்ள நிறுவனங்கள் என்றும், இயேசு ஆயர்கள் பேரவைகளை உருவாக்கவில்லை, மாறாக அவர் ஆயர்களை உருவாக்கினார் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் அருள், ஆயருக்கும், அவரது மக்களுக்கும், அவரது மறைமாவட்டத்திற்கும் இடையேயுள்ள உறவில் உள்ளது என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, கருக்கலைப்பு விவகாரம், அருளடையாளக்கூறைக் கொண்டிருப்பதால், அதனை அரசியலாக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இவ்விவகாரம், ஆயர்கள் பேரவையை அல்ல, மாறாக, தனிபட்ட ஆயரின் மேய்ப்புப்பணியைச் சார்ந்தது என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2022, 13:45