உடன்பிறந்த உணர்வில் ஒன்றிணைந்து பயணிப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 3, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் சாஹிர் அரச அரண்மனையின் மசூதியில் முஸ்லீம் முதியோர் அவை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுக்கு வழங்கிய உரை.
அமைதியின் ஊற்றான கடவுள்
கடவுள் அமைதியின் ஊற்றாக இருக்கின்றார். எல்லா இடங்களிலும் நாம் அவருடைய அமைதியின் கருவிகளாகச் செயல்பட அவர் நமக்கு உதவுவாராக! இங்கே, உங்கள் முன்னிலையில், அமைதியின் கடவுள் ஒருபோதும் போரைக் கொண்டு வருவதில்லை, வெறுப்பைத் தூண்டுவதில்லை, வன்முறையை ஆதரிப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், சகோதரராகவும், அமைதியின் திருப்பயணியாகவும் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். “உங்கள் வாயால் அமைதியை அறிவிக்கும்போதெல்லாம், உங்கள் இதயங்களில் அதிக அமைதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிய அசிசி நகரின் புனித பிரான்சிஸ் வழியில் நம் ஒன்றிணைந்து பயணிக்கும் பொருட்டு நான் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். அதிகமாக நாம் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும், ஒருவரையொருவர் அறிந்து கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும், எதார்த்தமான சிந்தனைகளை முன் வைக்க வேண்டும், கருத்து வேறுபாடுகளைக் களைந்து விண்ணுக்குரிய நற்காரியங்களில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அமைதியின் ஊற்றாக இருக்கின்ற கடவுளின் முன்பு, தவறான எண்ணங்கள் மற்றும் புரிதல்களைக் கடந்து, பகைமையின் கடந்த காலத்தை விட உடன்பிறந்த உணர்வு நிலையின் எதிர்காலத்தை நாம் கண்முன் கொண்டு செயல்படவேண்டும். அனைவரின் நலனுக்காகவும், அமைதி, சுதந்திரம், சமூக நீதி மற்றும் தார்மீக விழுமியங்களைப் பாதுகாக்கவும் அவற்றை மேம்படுத்தவும் ஒருவரையொருவர் ஊக்குவிப்போம்.
உடன்பிறந்த உணர்வில் பணி
அன்பான நண்பர்களே, ஆபிரகாமின் சகோதரர்களே மற்றும் ஒரே கடவுளை நம்புபவர்களே, சமூக, அனைத்துலகப் பொருளாதார மற்றும் தனிப்பட்ட தீமைகள், அத்துடன் இன்று நாம் இங்குப் பிரதிபலிக்கும் நமது காலத்தின் ஆபத்தான சுற்றுச்சூழல் நெருக்கடிகள் யாவும் கடவுளிடமிருந்தும் நமக்கு அடுத்திருப்போரிடமிருந்தும் நாம் விலகியதால் நமக்குக் கிடைத்தவை என்பதை உணர்வோம். மறக்கப்பட்ட வாழ்க்கையின் தோற்றுவாய்களை மீண்டும் கண்டுபிடிக்க மனிதகுலத்திற்கு உதவவும், பழங்கால ஞானத்தின் கிணறுகளிலிருந்து அருந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழிவகுக்கவும், நம்பிக்கையாளர்கள் விண்ணகத்தின் கடவுளை வணங்குவதற்குத் துணைபுரியவும், உடன்பிறந்த உணர்வுநிலையில் ஒவ்வொருவரும் பணியாற்றவேண்டியது நமது முதன்மையான கடமையாகிறது. இறைவேண்டல், உடன்பிறந்த உணர்வு ஆகிய இவை இரண்டின் வழியாகவே நாம் இவைகளைச் செயல்படுத்திட முடியும். இவைகளே நவீனமான மற்றும் செயலூக்கம் நிறைந்த ஆயுதங்களாக அமைந்துள்ளன. நமக்கு வேதனைத்தரும் விடயங்கள் எத்தனையோ நம்மைச் சுற்றி நிகழ்கின்றன. புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெறந்தோர் மேற்கொள்ளும் துன்ப துயரங்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாக் கொள்வோம். அனைத்தையும் கடந்து பணியாற்றும் நிலையும், உடன்பிறந்த உணர்வு நிலையுமே இவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.
செயல்களால் சான்று பகர்வோம்
எல்லாவற்றிற்கும் மேலாக, வெறும் வார்த்தைகளை விட, நம் செயல்களால் சான்று பகர்வதே மிகவும் முக்கியமானது. மேலும் கடவுளுக்கு முன்பாகவும் மனிதகுலத்திற்கு முன்பாகவும் நம்முடைய பொறுப்பு மிகப்பெரியது என்பதை உணர்வோம். நாம் கற்பிப்பதைப் பின்பற்றுவதும், நாம் வாழும் சமூகத்திலும், குடும்பங்களிலும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வதும் அவசியத் தேவையாகிறது. மனிதம் என்பது எதைக் குறிக்கின்றது? துயரங்களும், தீமைகளும், அநீதிகளும், இறப்புகளும் இங்கே ஏன் நிகழ்கின்றன என்று நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தின் ஆழத்தில் கேள்விகள் எழுப்பி சிந்திக்கும்போதுதான் வாழ்வின் உண்மைப் அர்த்தம் நமக்குப் புலப்படும். ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம், உரையாடலுக்கான இன்றைய நம் சந்திப்பைத் தொடர்வோம். ஒன்றாகப் பயணிப்போம்! என்றும் வாழும் இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்