கத்தோலிக்கப் பாரம்பரியத்திற்கு பிரமாணிக்கமாக இருங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒருவருக்கொருவர் செவிமடுத்தல், உரையாடல் மற்றும் குழுமத் தெளிந்துதேர்ந்தல் ஆகியவற்றின் உணர்வில், தூய ஆவியாரின் குரலுக்குத் திறந்த மனதுடன் செவிமடுக்கும்போது, அதுவே அமைதியான மற்றும் பயன்தரும் பணியாக அமையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
நவம்பர் 24, இவ்வியாழன்று, அனைத்துலக இறையியல் ஆணையத்தின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவில் உலகளாவிய உடன்பிறந்த உணர்வுநிலைப் பணியில் திருஅவையாக ஒன்றித்து வாழ்வதற்கு இயேசு நம்மை அழைக்கிறார் என்றும், இதுவே நற்செய்தியின் அறிவிப்பு பணியின் மையம் என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
இந்நேரத்தில் வரலாற்றில் நிகழ்ந்த மூன்று நிலைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலாவது கத்தோலிக்கப் சபாரம்பரியத்திற்குப் பிரமாணிக்கமாக இருப்பது என்றும், இரண்டாவதாக, பொருத்தமான வாழ்வு முறைகளை மேற்கொள்வது என்றும், மூன்றாவதாக, ஒன்றித்துப் பயணிப்பது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறையியலின் பணிகளை கடைப்பிடிப்பதற்கான உறுதிப்பாட்டை உண்மையுடனும் அன்புடனும் ஏற்றுக்கொள்வதும் குறைப்பதும் முதல் நிலையில் அமைகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்போஸ்தலிக்கப் பாரம்பரியத்தின் முன்னேற்றத்திற்காக இறைவனின் வார்த்தையைக் கேட்பதிலும், காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப அதனைப் புரிந்துகொண்டு செயல்படுத்துவதிலும் தூய ஆவியாரின் துணையை நாடுதல் அவசியம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
கத்தோலிக்கரல்லாதவர்கள் உட்பட வல்லுநர்களின் ஆலோசனைகள் வழியாக, ஆணைக்குழுவின் சட்டங்களின்படி, நற்செய்தியை ஆழமாக்குதல் மற்றும் அதனை வளர்ப்பதற்கான பணிகளைப் பொருத்தமாகவும், கூர்மையாகவும் செயல்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளின் பங்களிப்பிற்கு விவேகத்துடன் திறந்த மனதுடன் செவிமடுப்பதைத் தனது இரண்டாவது சிந்தனையாகப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் வாழ்க்கை மற்றும் பணிகளில் ஒன்றிணைந்த பயணம் பற்றிய முந்தைய ஐந்தாண்டுகளில் இது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதுபோல், மற்ற கிறிஸ்தவப் பணிகளைப் போலவே, இறையியலாளர்களின் பணியும் தனிப்பட்டதாக இருப்பதுடன், குழுமப் பணியாக அமைந்துள்ளது என்பதை உணர்வது என்பதை தனது மூன்றாவது கருத்தாகப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்