மறைக்கல்வியுரை: நம் இதயத்தின் நூலில் வாசிக்க கற்றுக்கொள்வோம்

உண்மையான ஆன்மிக ஆறுதல், கடவுள் நம்மிடம் விரும்புவதையே நாம் செய்கின்றோம் என்பதை ஒருவகையில் உறுதிசெய்வதாய் உள்ளது - நவம்பர் 30, புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 30, இப்புதன் வேதியல் ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உலக நாள். உக்ரைனில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் போரில் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நாளில் உலகின் பல இடங்களில் இடம்பெற்ற, மற்றும், இடம்பெறும் போர்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். உலகில், குறிப்பாக உக்ரைனில் அமைதி நிலவ தொடர்ந்து விண்ணப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு நாமும் இணைவோம். இப்புதன் உரோம் நேரம் காலை எட்டு மணிக்கு அர்ஜென்டீனா நாட்டு கத்தோலிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர் அருள்பணி Carlos Maria Galli அவர்களைச் சந்தித்து உரையாடியபின்னர், காலை 9.15 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, தெளிந்துதேர்தல் குறித்த தனது பத்தாவது மறைக்கல்விப் பகுதியைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன் (பிலி.1,9-11).

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். தெளிந்துதேர்தல் குறித்த நம் மறைக்கல்வியில், ஆன்மிக ஆறுதலால் கிடைக்கின்ற அனுபவம் பற்றி கடந்தவாரம் சிந்தித்தோம். அது உள்ளத்தில் ஆழ்ந்த மகிழ்வுணர்வைத் தருகின்றது எனவும், தூய ஆவியாரின் கொடையாகிய ஆன்மிக ஆறுதல், சோதனை மற்றும் துன்பநேரங்களில்கூட கடவுளின் ஆறுதலளிக்கும் இருத்தலையும், அனைத்திலும் அவரது பராமரிப்பையும் உணரச் செய்கின்றது எனவும் தியானித்தோம். நமக்கு கிடைக்கும் ஆன்மிக ஆறுதல் உண்மையானதா? என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது என நம்மையே நாம் கேட்கவேண்டும். இக்கேள்வி நல்லதொரு தெளிந்துதேர்தலுக்கு முக்கியமானதாகும். அவ்வாறு கேள்வி கேட்பதால் நமது உண்மையான நலனைத் தேடுவதில் நாம் ஏமாற்றப்படாமல் இருக்கமுடியும். உண்மையான ஆன்மிக ஆறுதல், இறையருளின் கொடையாகும். ஆண்டவர், மற்றும் நம் அயலவர் மீதுள்ள அன்பில் வளரவும், நம் வாழ்வில் கடவுளின் திருவுளத்தைத் தெளிந்துதேர்வுசெய்யவும், ஆன்மிக மற்றும், பிறரன்புச் செயல்களை நாம் ஆற்றவும் இது உதவுகிறது. உண்மையான இறைவேண்டல், நம் வாழ்வின் தொடக்கம், மத்தியப் பகுதி, அதன் இறுதி என எல்லா நிலைகளிலும் நற்கனிகளைக் கொணர்கிறது என்று புனித இஞ்ஞாசியார் நமக்குச் சொல்கிறார். மேலும் இது, நம் இறைவேண்டலின் கனிகளைத் தெளிந்துதேர்வுசெய்யவும், பெரும் நன்மைகளைச் செய்வதைக் குறைக்கும் மாற்றுவழிகளில் நம்மை ஏமாறவைக்கும் சோதனைகளை அறிந்துகொள்ளவும் முக்கியமானதாகும். உண்மையான ஆன்மிக ஆறுதலைத் தெளிந்துதேர்வுசெய்வதற்குப் பெரிய உதவியாக இருப்பது, ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ஆன்மப் பரிசோதனையாகும். இது, நம் மனங்கள் மற்றும், இதயங்களைத் தூய்மைப்படுத்துகிறது, புனிதத்துவம், மற்றும், கடவுளோடுள்ள ஒன்றிப்பில் நாம் வளர்வதற்கு அவரின் திருவுளத்திற்கு நம் மனதைத் திறக்கின்றது. உண்மையான ஆன்மிக ஆறுதல், கடவுள் நம்மிடம் விரும்புவதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம், அதாவது அவரது வழிகளாகிய மகிழ்ச்சி மற்றும், அமைதி நிறைந்த வாழ்வில் நாம் நடக்கிறோம் என்பதை ஒருவிதத்தில் உறுதிசெய்வதாகும். தெளிந்துதேர்தல் என்பது, நல்லது எது அல்லது, நல்லதை மிக நன்றாகச் செய்யக்கூடியது எது என்பது பற்றியது அல்ல, ஆனால், இந்நேரத்தில் எனக்கு நல்லது எது என்பது பற்றியதாகும். மேலும், இத்தருணத்தில் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பார்ப்பதற்கும் தெளிந்துதேர்தல் நமக்கு உதவும். இன்னும், இது, உண்மையாகவே நல்லது எது என்ற நம் தேடலில் பல்வேறு வாய்ப்புக்களுக்கு இடையே தெரிவுசெய்யவும் நமக்கு உதவுகின்றது.

புதன் மறைக்கல்வியுரை 301122
புதன் மறைக்கல்வியுரை 301122

இவ்வாறு உண்மையான ஆன்மிக ஆறுதல் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர், மற்றும், புதுமணத் தம்பதியரைச் சிறப்பாக நினைவுகூர்கிறேன். நாம் தொடங்கியிருக்கும் திருவருகைக் காலம், இறைவேண்டல், தவம், மற்றும், அறச்செயல்களோடு ஆண்டவரைச் சந்திக்க நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவார்த்தைக்குச் செவிசாய்த்தல், மற்றும், இயேசுவின் அருளுக்கு மனத்தாராளத்தோடு பதிலிறுத்தல் ஆகியவற்றால் அவரது பிறப்பைக் கொண்டாட நம்மையே தயாரிப்போம் என்றார்.   

புனித அந்திரேயாவின் விழா

மேலும், நவம்பர் 30, இப்புதனன்று, சீமோன் பேதுருவின் சகோதரரும், கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையின் பாதுகாவலருமாகிய திருத்தூதர் புனித அந்திரேயாவின் விழாவைச் சிறப்பிக்கிறோம். வழக்கம்போல் இவ்விழாவன்று திருப்பீட பிரதிநிதி குழு ஒன்று கான்ஸ்தாந்திநோபிள் சென்றுள்ளது. இந்நாளில் எனது அன்புச் சகோதரரான கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கும், அத்திருஅவை முழுவதற்கும் எனது வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். திருஅவை விரைவில் முழு ஒன்றிப்பை அனுபவிக்கவும், உலகமனைத்தும், குறிப்பாக, நம் மனங்களிலும், செபங்களிலும் எப்போதும் இருக்கின்ற கடுந்துன்பத்தை எதிர்கொள்ளும் அன்புமிக்க உக்ரைனும் அமைதியை அனுபவிக்கவும், உடன்பிறப்புக்களான திருத்தூதர்கள் பேதுரு, மற்றும் அந்திரேயாவின் பரிந்துரையை வேண்டுவோம் என்றும் திருத்தந்தை கூறினார். பின்னர், உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2022, 11:25