தேடுதல்

விபத்துக்குள்ளான விமானம்  விபத்துக்குள்ளான விமானம்  

BUKOBA விமான விபத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல் தந்தி

Dar es Salaamலிருந்து Bukobaவிற்கு Mwanza வழியாக பயணித்துக்கொண்டிருந்த ATR-42 என்னும் உள்ளூர் விமானம் தரையிறங்கும்போது கடுமையான வானிலை மாற்றத்தால் அருகில் உள்ள விக்டோரியா ஏரியில் விபத்துக்குள்ளானது

மெரினா ராஜ் – வத்திக்கான்

தான்சனியாவில் உள்ள புகோபாவில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெறவும், காயமடைந்தவர்கள் குணம்பெறவும், மேலும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் பணி செய்வதற்கேற்ற ஆற்றலைப் பெறவும் தான் தொடர்ந்து செபிப்பதாக இரங்கல் தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.

நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெற்கு ஆப்ரிக்க நாடாகிய தான்சனியாவில் உள்ள BUKOBAவில் நடைபெற்ற விமான விபத்தில் ஏறக்குறைய 19 பேர் உயிரிழந்தும் பலர் காயமடைந்திருக்கின்ற சூழலில், தான்சானியாவின் திருப்பீடத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் இரங்கல் செய்தியில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுடன் ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், எல்லாம் வல்ல இறைவனின் அருளையும் ஆறுதலையும் அமைதியையும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் திருத்தந்தை வேண்டுவதாகவும் அவ்விரங்கல் தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dar es Salaam லிருந்து  Bukobaவிற்கு Mwanza வழியாக பயணித்துக் கொண்டிருந்த ATR-42 என்னும் உள்ளூர் விமானம் தரையிறங்கும்போது கடுமையான வானிலை மாற்றத்தால் அருகில் உள்ள விக்டோரியா ஏரியில் விபத்துக்குள்ளானது என்றும், இதில் பயணம் செய்த 43 பயணிகளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்டோரியா ஏரியில் மூழ்கி விபத்துக்கு உள்ளான விமானத்தை கரைக்கு அருகில் இழுக்க கயிறுகளைப் பயன்படுத்தி மீட்புப்படையினர் முயற்சித்து வருகின்றனர் என்றும், விமானத்தில் இருந்த 43 பேரில் 24 பேர் உயிர் பிழைத்துள்ளனர் என்றும், விமான விபத்து பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவித்த விமான ஓட்டுனர்களின் நிலவரம் என்ன என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

உள்ளூர் நேரப்படி 08:50 மணியளவில் நிகழ்ந்த இந்த வருத்தத்திற்குரிய நிகழ்விற்குக் காரணம் மோசமான வானிலை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Tanzaniaவின் மிகப்பெரிய தனியார் விமான நிலையம் கென்யா விமான நிறுவனத்தின் ஒரு பகுதி என்பதும், அது உள்ளூர் மற்றும் மாநில விமானச் சேவையை செய்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2022, 14:07