அருள்பணியாளரின் உருவாக்கம், நற்செய்தி அறிவிப்புப்பணியின் மையம்
மேரி தெரேசா: வத்திக்கான்
உரோம் நகரில் இலத்தீன் அமெரிக்காவின் அருள்பணித்துவப் பயிற்சிக் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும், பயிற்சியாளர்களுக்கென்று, அருள்பணியாளர் திருப்பீடத் துறை நடத்தும் கருத்தரங்கில் பங்குபெறும் ஏறத்தாழ 160 உறுப்பினர்களை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் நவம்பர் 10, இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தை மற்றும், அருளடையாளங்களால் ஆண்டவர் இயேசுவின் இருத்தலை வெளிப்படுத்தும் திருப்பணியை ஆற்றுகின்றவர்களை உருவாக்குவதில், தரமான ஒரு பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, Ratio fundamentalis institutionis sacerdotalis அதாவது அருள்பணித்துவ அழைத்தல் வாழ்வின் கொடை பற்றிய திருத்தூது அறிக்கையில், குருத்துவப் பயிற்சிக் கல்லூரிகளில் அருள்பணியாளர்களின் உருவாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பண்புகள் பற்றி எடுத்துரைத்தார்.
அருள்பணித்துவ வாழ்வுக்கான பயிற்சி, தனித்துவமிக்கது, அவசியமானது, குழும, மற்றும், மறைப்பணிப் பண்பைக்கொண்டது என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் இறையழைத்தல் குறைவதால், இப்பயிற்சிக் கல்லூரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், மறைமாவட்டங்கள், மற்றும், மாநில பயிற்சிக் கல்லூரிகளுக்கு இடையே இவற்றை அமைக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இது, நாடுகளின் ஆயர் பேரவைகளின் பணியாகும் என்று கூறியத் திருத்தந்தை, அருள்பணித்துவ வாழ்வுக்குப் பயிற்சி பெறுபவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
உருவாக்குனர்களுக்கு இயேசுவே முன்மாதிரிகை
அருள்பணியாளர்களே, நீங்கள் திருஅவைக்கு ஆற்றுகின்ற பணி எளிமையானது அல்ல, உருவாக்கும் பணியில் மனச்சோர்வு, களைப்பு, கோபம், திறமையின்மை போன்ற உங்களின் மனிதத்திற்கு அடிக்கடி சவாலை எதிர்கொள்கின்றீர்கள் என்றுரைத்த திருத்தந்தை, இக்காரணத்தால் அவர்கள், மனத்தாழ்மையும் கனிவும் நிறைந்த இயேசுவிடம் தினமும் செபிக்கவேண்டும், இதனால் அவர்களின் இதயம், மெதுமெதுவாக போதகரான ஆண்டவர் இயேசுவின் துடிப்பிலிருந்து கற்றுக்கொள்ளும் என்று எடுத்துரைத்தார்.
உருவாக்கும் பணியிலிருப்போர், பயிற்சிபெறுவோர் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து அக்கறை காட்டவேண்டும் என்றும், அவர்களது வாழ்வு மற்றும், பணியை மதித்து அவர்களுக்குத் திறந்த மனதோடு உண்மையான உரையாடலில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உருவாக்குனர்கள், தங்களின் மனிதப் பலவீனத்தையும் அதேநேரம் கடவுளின் அருளையும் ஏற்று, இறைமகனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பயிற்சிபெறுவோரின் நம்பிக்கை மற்றும், ஒருங்கிணைந்த முதிர்ச்சிநிலையின் பயணத்தில் அவர்களை வழிநடத்துமாறும் கூறியுள்ளார்.
உருவாக்கும் பணியிலிருப்போரே, குருத்துவ வாழ்வில் உங்களின் சகோதரர்களாக இருக்கவுள்ள, வருங்கால அருள்பணியாளர்களை உருவாக்கும் உங்களின் பணிக்கும் வாழ்வுக்கும் திருஅவை நன்றியுடன் இருக்கின்றது என்றும், அருள்பணியாளர்களின் அன்னை மரியா, உங்களை ஊக்கப்படுத்தி, உங்களது பணியை வழிநடத்துவாராக, எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்று சொல்லி, தன் உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்