உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
நவம்பர் 02, இப்புதன் பிற்பகலில் உரோம் மாநகர் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு வீற்றிருக்கும் Salus Populi Romani, அதாவது உரோம் மக்களுக்கு நலமளிக்கும் அன்னை மரியா திருப்படத்தின் முன்பாக, தான் மேற்கொள்ளவிருக்கும் 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்துச் செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வெளிநாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பு அப்பயணங்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதையும், அப்பயணங்களை முடித்துத் திரும்பும்போது அப்பெருங்கோவிலுக்குச் சென்று அவ்வன்னையிடம் நன்றி கூறுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 03, இவ்வியாழனன்று தொடங்கவிருக்கும் பஹ்ரைன் திருத்தூதுப் பயணத்திற்காகவும் செபித்தார். இந்நோக்கத்திற்காக இப்புதனன்று திருத்தந்தை அப்பெருங்கோவிலுக்குச் சென்றது நூறாவது தடவையாகும்.
Santo Teutonico கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை செபம்
நவம்பர் 02, இப்புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் வத்திக்கானில், புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அருகிலுள்ள Santo Teutonico கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு நாளான இப்புதன் காலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல், 2022ஆம் ஆண்டு அக்டோபர் வரை இறந்த் திருஅவையின் அனைத்துக் கர்தினால்கள், பேராயர்கள் மற்றும், ஆயர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அக்கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று செபித்தார்.
அக்கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கின்ற, கிறிஸ்துவின் அருள்பணியாளர் சிறிய சகோதரிகள் அங்குத் திருத்தந்தையை வரவேற்றனர்.
அங்குச் சிறிதுநேரம் அமைதியாகச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர் அக்கல்லறைகள் மீது புனித நீரைத் தெளித்து ஆசிர்வதித்து, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திற்குத் திரும்பினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்