தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உரையாடல், நம்பிக்கையின் கலாச்சாரத்தை வளருங்கள் -திருத்தந்தை

சந்திப்பு, நம்பிக்கை ஆகிய இரண்டும் மனித இதயங்களை இலகுவாக்கி திறந்த மனதுடையவர்களாக மாறச்செய்கின்றது. திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்பிக்கை என்பது எதிர்நோக்கிற்கான வலுவான அழைப்பு  எனவும் புதிய செயல்களைச் செய்யத்தூண்டவும், அர்ப்பணிப்புடன் வாழ்விற்கு உயிர் கொடுக்கவும் துணைபுரியும் உரையாடல் மற்றும் நம்பிக்கைக் கலாச்சாரத்தை வளருங்கள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

நவம்பர் 24 வியாழன் முதல் 27 வெள்ளி வரை இத்தாலியின் வெரோனாவில் நடைபெறும்,   திருஅவை சமூகக்கோட்பாடுகளின் 12வது கொண்டாட்ட நிகழ்விற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

சந்திப்பு, நம்பிக்கை ஆகிய இரண்டும்  மனித இதயங்களை இலகுவாக்கி திறந்த மனதுடையவர்களாக மாறச்செய்கின்றது என்றும், புதிய செயல்களைச்  செய்யவும், அர்ப்பண மன நிலையுடன் வாழவும்,  வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கவும் துணைபுரியும் இவற்றை வளர்க்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

நம்பிக்கை மற்றும் சந்திப்பு

பொதுநலன் என்பது எளிதானதல்ல, மாறாக ஒரு சமுதாயத்தை நேர்மையாகவும், உண்மையாகவும், அழகாகவும் கட்டியெழுப்புவதற்கான உறுதி என்றும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவும், கிறிஸ்துவின் முகத்தை பிறரில் காணவும், அவர்களது இன்ப, துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருந்தால் மட்டுமே பிறர் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நம்பிக்கையை உருவாக்குதல் மற்றும் சந்திப்பின் பேரார்வம் என்ற தலைப்பில் தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், நிறுவன உலக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பலர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் ஒத்துழைப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் நம்பிக்கை மற்றும் சந்திப்பின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் சந்திப்பின் பேரார்வம்

வடிவமைத்தல், மற்றும் உருவாக்குதல் என்பது கட்டடக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் சிறப்பான செயல் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், துல்லியமாக, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாக நமது நம்பிக்கை இருக்கவேண்டும் எனவும்,  நம்பிக்கையுள்ளவர்களாக நாம் வாழவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

உங்களையும் பிறரையும் நம்புங்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  இறைவாக்கினர் எரேமியாவின் இறைவார்த்தைகளான, ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்  பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும் என்பதையும் நினைவுபடுத்தினார்.

ஒருவரையொருவர் எதிர்கொள்ளவும், கிறிஸ்துவின் முகத்தை பிறரில் காணவும், இன்பங்களையும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருந்தால் மட்டுமே இயேசு மீது நம்பிக்கை வைக்க முடியும் என்று கூறிய திருத்தந்தை,  நாம் அன்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் அந்த அன்பைப் பிறருக்கும் வழங்குவோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

சுயநலத்தை  மனித உடன்பிறந்த உறவாகவும், வேறுபாடுகளை சந்திப்பாகவும், வாள்களைக் கலப்பைகளாகவும் மாற்றுதல், அச்சுறுத்தும் போரின் விவாதங்களிலிருந்து நம்மைக் காப்பதற்கான வழி என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2022, 13:39