FOCSIV, மனித உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்ப உதவுகின்றது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
எல்லா வகையான ஏழ்மை, மற்றும், புறக்கணிப்புக்கு எதிராகவும், மனித மாண்பு காக்கப்படவும், சமுதாயங்கள் மற்றும், நிறுவனங்களில் மனித உரிமைகளுக்கு உறுதிகூறப்படவும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக, மிகச் சிறந்த பணிகளை ஆற்றிவருகின்ற உலகளாவிய கிறிஸ்தவ தன்னார்வலர் அமைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
FOCSIV என்ற உலகளாவிய கிறிஸ்தவ தன்னார்வலர் கூட்டமைப்பு, 94 தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, நவம்பர் 14, இத்திங்களன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் தன்னைச் சந்தித்த அக்கூட்டமைப்பின் 150 பேருக்கு அந்நேரத்தில் எழுந்த தன் எண்ணங்களை எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பசி மற்றும், போர்களுக்கு அடிமையாகியுள்ள இன்றைய உலகில், நம்பிக்கையைப் பிறப்பிக்கும் அன்னை திருஅவையின் ஓர் அழகான அடையாளங்கள் என்றும் திருத்தந்தை அவ்வமைப்பினரைப் பாராட்டியுள்ளார்.
இத்தன்னார்வலர் அமைப்பினர், அமைதி இயலக்கூடியதே என்பதற்கும், ஒவ்வொரு நாளும் ஆற்றுகின்ற சிறிய செயலும் உடன்பிறந்த உணர்வைப் பெரிய அளவில் கட்டியெழுப்பும் என்பதற்கும் தெளிவான சான்றுகள் என உரைத்த திருத்தந்தை, அனைவரும் வரவேற்கப்படுகின்ற, மற்றும், தங்களின் கனவுகள் கைவிடப்பட கட்டாயப்படுத்தப்படாத ஓர் ஒருமைப்பாட்டு உலகை எல்லாரும் விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.
அனைத்து நாடுகள்மீதும் பாதிப்புக்களை உருவாக்கும் மூன்றாம் உலகப் போரின் நிழல் தெரிகின்ற இக்காலக்கட்டத்தில், புதிய தலைமுறைகளுக்கு எத்தகைய வருங்காலத்தை அமைக்க விரும்புகிறோம் என்ற கேள்வி, உலக அளிவல் கேட்கப்பட்டு, அதற்குரிய பதில்கள் காணப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னார்வலர் அமைப்புகள், மிக நெருக்கமாக இருந்து பணியாற்றும் குரலற்ற பலரின் அழுகையை நிறுத்துவதற்கு உதவும் மூன்று இலக்குகள் குறித்து சிந்திக்க விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, இன்று தன்னார்வலர்களாக இருப்பதன் அர்த்தம், அமைதி குறித்த அக்கறை, அனைத்து மனிதரின் முன்னேற்றம் ஆகியவையே அம்மூன்றும் என்று எடுத்துரைத்தார்.
நல்ல சமாரியர்களாக வாழ அழைப்பு
தன்னார்வத்தொண்டு, தோழமையுணர்வில் ஆழமாக வேரூன்றப்பட்டதாகும் என்றும், எல்லாக் கண்டங்களிலும், வறுமை, அநீதி, வன்முறை ஆகியவை நிலவும் சூழலில், FOCSIV கூட்டமைப்பினர், ஒவ்வொரு மனிதரையும் சகோதரர் சகோதரிகளாக ஏற்கின்றனர் என்றும் பாராட்டியத் திருத்தந்தை, வெறுப்பு மற்றும், பழிவாங்கும் உணர்வைக் கைவிட்டு நல்ல சமாரியர்களாக நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
அமைதியை ஊக்குவித்தல்
உக்ரைன் மற்றும், இப்பூமிக்கோளத்தின் மற்ற பகுதிகள் போரினால் மிதிபட்டு, காயமடைந்துள்ளவேளை, சிறந்ததோர் வருங்காலத்தை அமைப்பதற்கும், மாண்புள்ள வாழ்வுக்கும் அமைதி இன்றியமையாதது என்றும், இவ்வுலகத்திற்கு வெற்று வார்த்தைகள் அல்ல, மாறாக சான்றுவாழ்வே தேவைப்படுகிறது என்பதை, FOCSIVன் தன்னார்வலர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எடுத்துரைத்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒன்றிணைந்த முன்னேற்றம்
ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் வாழ்வதற்கு, அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன என்றும், ஒருங்கிணைந்த முன்னேற்றமே, நல்லதொரு வாழ்வுக்கு வழியமைக்கும் என்றும் கூறியத் திருத்தந்தை, மாண்புள்ள வாழ்வைத் தேடி தங்களின் சொந்த இடங்களைவிட்டு இன்று கட்டாயமாகப் புலம்பெயரும் இளையோர் குறித்து சிந்தித்துப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
உலகில் அமைதியை ஏற்படுத்துபவர்களாகவும், பிறரன்பு, மற்றும், வளர்ச்சியின் கைவினைஞர்களாகவும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் நல்ல சமாரியர் பணிகளைத் தொடருமாறும், இன்னல்கள், மற்றும், ஏமாற்றங்களால் மனம் தளர்ந்துவிடாமல் ஆண்டவரில் நம்பிக்கை வைக்குமாறும் FOCSIV அமைப்பினரை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரையும் அன்னை மரியாவின் பாதுகாவலில் அர்ப்பணிப்பதாகவும், அவர்களுக்காகச் செபிப்பதாகவும் உறுதி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்