தேடுதல்

திருத்தந்தையின் மறையுரை 021122 திருத்தந்தையின் மறையுரை 021122 

திருத்தந்தையின் மறையுரை: எப்பொழுது? என்பது இப்போது நம் கரங்களில்

இறைவனடி சேர்ந்த (நவம்பர் 2021-அக்டோபர் 2022) கர்தினால்கள், பேராயர்கள், மற்றும், ஆயர்களின் ஆன்மாக்களின் நிறையமைதிக்காக திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, எதிர்நோக்கியிருத்தல், வியப்பு ஆகிய இரு சொல்லாடல்களை மையப்படுத்தி மறையுரையாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 02, இப்புதன், இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு நாள். வழக்கமாக ஒவ்வொரு புதன்கிழமை காலையில் நடைபெறும் பொது மறைக்கல்வியுரைக்குப் பதிலாக, இப்புதன் காலை 11 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல், 2022ஆம் ஆண்டு அக்டோபர் வரை உலகளாவியத் திருஅவையில் இறைவனடி சேர்ந்த கர்தினால்கள், பேராயர்கள், மற்றும், ஆயர்களின் ஆன்மாக்களின் நிறையமைதிக்காக திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றினார். இக்கால இடைவெளியில் உலகளாவியத் திருஅவையில் 9 கர்தினால்கள், 148 பேராயர்கள், மற்றும், ஆயர்கள் இறைவனடி சேர்ந்துள்ளனர். இத்திருப்பலியின் நற்செய்தி வாசகமான, “மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு” என்ற மத்தேயு நற்செய்தி பகுதி (25,31-46) குறித்த தன் எண்ணங்களை மறையுரையில் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எதிர்நோக்கியிருத்தலில் வாழ்தல்

எதிர்நோக்கியிருத்தல் என்பது, வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால் "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்" (மத்.25:34) என்ற இயேசுவின் வார்த்தைகளை ஒருநாள் கேட்போம் என்ற நம்பிக்கையில், அவரைச் சந்திக்கும் எதிர்நோக்கியிருத்தலில் நாம் எல்லாருமே வாழ்ந்து வருகின்றோம். அதுவே இன்றையப் பரிந்துரை இறைவேண்டலுக்கு, குறிப்பாக, கடந்த ஆண்டில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்காக நாம் நிறைவேற்றுகின்ற திருப்பலிக்கு காரணமாகும். படைகளின் ஆண்டவர், மக்களினங்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்துள்ள விண்ணக விருந்தில் (காண்க.எசா.25:6) பங்குகொள்ள நாம் காத்திருக்கிறோம். நிலைவாழ்வுக்காக, நம் உடலின் மீட்புக்காகக் காத்திருக்கிறோம். அன்புச் சகோதரர் சகோதரிகளே, விண்ணகம் செல்வதற்கான நம் ஆவலை பேணி வளர்த்துக்கொள்வோம். ஏனெனில் நாம் நிரந்தரமற்ற பொருள்கள்மீது தொடர்ந்து ஏங்கும் ஆபத்தில் உள்ளோம்.

திருத்தந்தையின் மறையுரை 021122
திருத்தந்தையின் மறையுரை 021122

வியப்பு

மத்தேயு நற்செய்தியின் இயல் 25ஐ வாசிக்கும்போது, நாளைய தினத்திற்காக எதிர்நோக்கியிருக்கின்ற நாம், எக்காலத்திலும் வியப்பு என்பது இருப்பதைத் தெரிந்துகொள்கிறோம். உலகின் இறுதித் தீர்வை நாளில், ஆண்டவர் நேர்மையாளர்களைப் பார்த்துக் கூறும்போது, ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?’ (மத்.25,37-39) என்று கேட்பார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. இந்நற்செய்திப் பகுதியில், நேர்மையாளர்கள், மற்றும், நேர்மையற்றவர்களின் வியப்பு வெளிப்படுத்தப்படுகிறது

ஆண்டவரே, எப்பொழுது?

வாழ்வு, உலகின் சூழல்கள் மற்றும் எண்ணங்கள் குறித்து இறைவனின் நீதித் தீர்ப்பு நடைபெறும்போது, ஆண்டவரே, எப்பொழுது? என நாமும் கேட்கலாம். அப்போது ஆண்டவர், மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத்.25, 40) எனச் சொல்வார். ஏழைகள் மற்றும், புறக்கணிக்கப்பட்டோருக்கு நாம் காட்டிய இரக்கத்தை வைத்தே தீர்ப்பிடப்படுவோம். ஏனெனில் மனிதராகப் பிறந்து, ஊழியராக வாழ்ந்து, ஏழையாக இறந்த கடவுள் வடிவில் விளங்கிய இயேசுவே நடுத்தீர்க்க வருபவர். அவரது அன்பு எல்லையற்றது. அவரது தீர்ப்பின் அளவுகோல், கைம்மாறு கருதாதது. எனவே இதற்குத் தகுந்தாற்போல் நாமும் நம்மைத் தயாரிக்கவேண்டும். அதாவது எதிர்பார்ப்பின்றி, கைம்மாறு கருதாமல், அன்புகூரவேண்டும். மிக உன்னதமானவர், உலகில் மிகச் சிறியோரில் குடியிருக்கிறார். என்பது எத்துணை வியப்புக்குரியது.    

எப்பொழுது?

திருத்தந்தையின் மறையுரை 021122
திருத்தந்தையின் மறையுரை 021122

எப்பொழுது? என்ற கேள்வியை, மனித சமுதாயம் ஆண்டவரிடம் நான்கு முறைகள், (காண்க.மத்.25:37,38,39,44) அதுவும் தாமதமாக, மானிட மகன் மாட்சியுடன் வரும்போது (வ.31) அவரிடம் கேட்டதாக இந்நற்செய்திப் பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அன்புச் சகோதரர், சகோதரிகளே, இதைக்கண்டு நாம் வியப்படையவேண்டாம். சில நேரங்களில் நமது வசதிக்காக இயேசுவின் நற்செய்தியை ஆக்கிக்கொள்கிறோம். பசித்திருப்போருக்கு உணவளிக்கின்றோம், ஏழைகளுக்கு உதவுகின்றோம், ஆயினும் அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளைக் களையும் முயற்சி நம்மைப் பாதிக்கும் என்பதால் அதில் ஈடுபடாமல் இருக்கிறோம். நோயாளிகள் மற்றும், கைதிகளோடு நெருக்கமாக இருக்கிறோம், அதேநேரம், செய்தித்தாள்கள் மற்றும், சமூக ஊடகங்களில் கடுமையான பிரச்சனைகள் முதல் பக்கங்களில் வெளிவரும்போது, அவ்வாறு நெருக்கமாக இருப்பதிலிருந்து ஒதுங்கிவிடுகிறோம். புலம்பெயர்ந்தோரை வரவேற்கின்றோம், அது சிக்கலான பொதுப் பிரச்சனை, அரசியல் சார்ந்தது என அதிலிருந்தும் ஒதுங்கி விடுகின்றோம். இவ்வாறு ஆயினும், ஆயினும்... என்றுகூறி, நற்செய்திப் படிப்பினையோடு நம் வாழ்வை ஓர் இணக்கமுள்ளதாக ஆக்கிக்கொள்கிறோம். நம் ஆண்டவரின் எளிமையான சீடத்துவநிலையிலிருந்து கடுஞ்சிக்கலின் தலைவர்களாக மாறிவிடுகிறோம்.

எப்பொழுது? என்பது, இன்று நம் கரங்களில், நம் இரக்கச் செயல்களில் உள்ளது. மரணம், வாழ்வின் உண்மையையும், இரக்கச் செயல்களை ஆற்றுவதற்கான சூழல்களை நீக்குகிறது என்பதையும் உணரச் செய்கிறது என ஆண்டவர் நமக்கு நினைவுபடுத்துகின்றார். இந்த உண்மை நமக்குத் தெரியாது என்று கூற முடியாது, ஏனெனில் அன்பான கடவுளை, அன்புகூர்தல் வழியாக அவரைச் சந்திப்பதற்கு எவ்வாறு காத்திருத்தலில் வாழவேண்டும் என நற்செய்தி விளக்குகிறது. உலகின் ஏழைகள், மற்றும், காயமுற்றோர் மத்தியில் நமக்காகக் காத்திருக்கும் கடவுளின் இருத்தலால் நாம் வியப்படைய நம்மையே இப்போது அனுமதித்தால் வாழ்வின் இறுதி நாளில் அந்த வியப்பு மகிழ்ச்சியாக இருக்கும். சொற்களால் அல்ல, செயல்களால் அரவணைக்கப்பட ஆண்டவர் காத்திருக்கிறார் என்றுரைத்து தன் மறையுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2022ஆம் ஆண்டில் இந்தியாவில் இறைபதம் சேர்ந்த பேராயர்கள், மற்றும், ஆயர்கள்

  • கர்நூல் முன்னாள் ஆயர் மத்யூ செரியாக்குன்னல் (30 மார்ச் 2022)
  • ஸ்ரீகாகுளம் முன்னாள் ஆயர் Innayya Chinna Addagatla    (01  ஏப்ரல் 2022)
  • அலெப்பே முன்னாள் ஆயர் Stephen Athipozhiyil      (04  ஏப்ரல் 2022)
  • உதய்பூர் முன்னாள் ஆயர் Joseph Pathalil            (14  ஏப்ரல் 2022)
  • கோவா முன்னாள் பேராயர் Raul Nicolau Gonsalves      (01 ஜூலை 2022)
  • இம்பால் முன்னாள் பேராயர் Joseph Mittathany             (11 ஜூலை 2022)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2022, 13:12