தேடுதல்

மூவேளை செப உரை 011122 மூவேளை செப உரை 011122 

திருத்தந்தை: பஹ்ரைன் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபியுங்கள்

உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதிக்கான காரணத்தை கடவுளின் பெயரால் ஊக்குவிக்க, இப்பயணத்தில் தான் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வும், சந்திப்பும் பலனுள்ள வாய்ப்பாக அமையச் செபியுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 01, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட புனிதர் அனைவர் பெருவிழாவை மையப்படுத்தி, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவேளை செப உரையாற்றியபின்னர், நவம்பர் 03, வருகிற வியாழன் முதல், வருகிற ஞாயிறு வரை தான் மேற்கொள்ளவிருக்கும், பஹ்ரைன் நாட்டுத் திருத்தூதுப் பயணம் குறித்துக் குறிப்பிட்டார்.

பஹ்ரைன் அரசர், அந்நாட்டு கத்தோலிக்கர், மக்கள், குறிப்பாக, இத்திருத்தூதுப் பயணத்திற்காக நீண்டகாலமாகத் தயாரித்துவந்த எல்லாருக்கும் தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, உரையாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இப்பயணம் அமையும் என்று உரைத்தார்.

கிழக்கும் மேற்கும், மனித நல்லிணக்கத்திற்கு இணைந்துவரவேண்டியதன் தவிர்க்கமுடியாத தேவை என்ற தலைப்பில் பஹ்ரைனில் நடைபெறும் அவையில் தான் பங்குகொள்ள இருப்பது குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, பல்வேறு மதங்களின், குறிப்பாக, இஸ்லாமின் பிரதிநிதிகளோடு பேசுவதற்கு தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறினார்.

இந்த நம் காலத்திற்கு மிகவும் மற்றும், உடனடியாகத் தேவைப்படுகின்ற உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதிக்கான காரணத்தை கடவுளின் பெயரால் ஊக்குவிக்க, இப்பயணத்தில் தான் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வும், சந்திப்பும் பலனுள்ள வாய்ப்பாக அமையச் செபிக்குமாறு திருத்தந்தை திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.

உக்ரைனில் அமைதி

மேலும், உடன்பிறந்த உணர்வு மற்றும் அமைதி குறித்துப் பேசியபோது, போரினால் சிதைந்துள்ள உக்ரைனை மறக்காதிருப்போம், அந்நாட்டில் அமைதி நிலவச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2022, 14:55