தேடுதல்

திருத்தந்தை: நன்மைத்தனம், செபம், பிறரன்பில் நிலைத்திருங்கள்

மனஉறுதியோடு தொடர்ந்து இருப்பது என்பது, தினமும் நன்மைத்தனத்தைக் கட்டியெழுப்பவேண்டும், அதில் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 13, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் (லூக்.21:5-19), இயேசு பேசுகின்ற மனஉறுதி என்பது,  தினசரி செபம், நற்பணிகள், பிறரன்புப்பணி ஆகியவை வழியாக அவரின் நன்மைத்தனத்தில் நிலைத்திருக்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் ஆறாவது வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றியபின்னர், அன்று நண்பகலில் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, வாழ்வில் முக்கியமானது எது என்பதில் நாம் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில், இயேசு, எருசலேம் கோவிலின் கவின்மிகு அழகு பற்றியும், ஒரு காலம் வரும், அப்போது அதன் கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் (லூக்.21,5-6) என்றும் கூறியிருப்பது, இவ்வுலகப் பொருள்களின் நிலையற்ற தன்மையை எடுத்துரைக்கின்றது என்று கூறியத் திருத்தந்தை, வரலாற்றில் இடம்பெறும் போர்களும், இயற்கைப் பேரிடர்களும் எவ்வாறு எல்லாவற்றையும் அழிக்கின்றன என்று சிந்திப்போம் என்று கூறினார்.

மனஉறுதியைக் காத்துக்கொள்ளுங்கள்

இயேசுவின் நிதானமான இவ்வார்த்தைகள், மனித வாழ்வின் நிச்சயமற்ற, மற்றும், நிலையற்ற தன்மையிலிருந்து வெளிவர ஒரு வழி உள்ளது என்ற சிறந்த போதனையை நமக்கு வழங்குகின்றன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களின் மன உறுதியால் உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்வீர்கள் என்ற சொற்களில் உள்ள மனஉறுதி என்பது, வாழ்வில் முக்கியமானதில் உறுதியோடு இருக்கவேண்டும் என்று உரைக்கின்றது என்று கூறியுள்ளார்.

மூவேளை செப உரை 131122
மூவேளை செப உரை 131122

முக்கியமானதில் கவனம்

எருசலேம் கோவிலின் கவின்மிகு பொருள்கள் போன்று, இவ்வுலகிலுள்ள நம் வெற்றிகள், மரபுகள், மதம், கலாச்சார அடையாளங்கள் போன்றவற்றைக் கொண்டாடுகிறோம், அவை முக்கியமாக இருந்தாலும், நிலையற்றவை என்றுரைத்த திருத்தந்தை, தொடர்ந்து மனஉறுதியோடு இருப்பது என்பது, தினமும் நன்மைத்தனத்தைக் கட்டியெழுப்பவேண்டும், அதில் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும், குறிப்பாக, வேறொன்றைச் செய்வதற்கு நாம் தூண்டப்படும்போது,  அவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அன்றாட வாழ்வில் பரபரப்புடன் இருக்கும்போது செபிக்கவேண்டும், விதிமுறைகளின்படி விளையாடிக்கொண்டிருக்கும்போது, நம் நேரத்தை, நம் குழுமத்திற்கு, ஏழைகளுக்கு மற்றும், பங்குத்தளத்திற்கு அளிக்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, நன்மைத்தனத்தில் உறுதியாய் நிலைத்திருக்க நாம் மேற்கொள்ளும் முயற்சியில் அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2022, 12:30