புனிதர்கள் போன்று அமைதியை கட்டியெழுப்புவர்களாக இருங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இரக்கம், அன்பு மற்றும், நீதிக்கு ஆற்றும் பணிகள் வழியாக அமைதியின் பாதையைத் துணிச்சலோடு கட்டியெழுப்புகின்றவர்களாக, அமைதியை உண்மையாகவே ஏற்படுத்துபவர்களாக வாழுமாறு புனிதர்களின் வாழ்வு நமக்குத் தூண்டுதலாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.
புனிதர் அனைவர் பெருவிழாவான, நவம்பர் 01, இச்செவ்வாய் நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, இயேசுவின் பேறுபெற்றோர் குறித்த இந்நாளின் நற்செய்தியை (மத்.5:1-12) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, பேறுபெற்றோர் என்பது, புனிதர்களுக்கு "ஓர் அடையாள அட்டை"யாக உதவியுள்ளது என்று தெரிவித்தார்.
புனிதர்கள், ஒரு நிறைவான மற்றும், சரியான வாழ்வை வாழ்ந்தார்கள் என்று வழக்கமாகச் சிந்திப்பதைவிடுத்து, அவர்கள், மாற்றுக்கலாச்சார மற்றும், புரட்சிகரமான ஒரு வாழ்வை துணிச்சலோடு வாழ்ந்தார்கள் என்பதை, பேறுபெற்றோர் சுட்டிக்காட்டுகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்
இயேசுவின் மலைப்பொழிவில் அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் (வ. 9) என்பதை எடுத்துக்காட்டாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி குறித்து நாம் கற்பனை செய்கின்ற அல்லது, அது குறித்து நாம் விளக்க நினைக்கின்ற அமைதி போன்றது அல்ல, இயேசு கொணர்ந்த அமைதி என்றும் எடுத்துரைத்தார்.
அமைதி என்பது, எந்தவித இடையூறும், பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் நிலை என பல நேரங்களில் நாம் நினைக்கின்றோம், ஆனால், நீதி மற்றும், இரக்கம் ஆகியவற்றின் பணிகள் வழியாக அமைதியைக் கட்டியெழுப்பும், அமைதி ஏற்படுத்துவோராகச் செயல்பட இயேசு அழைக்கின்றார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதியை விதைப்பது, வாழ்வின் நிலத்திலிருந்து, நம் இதயத்திலிருந்து பிறக்கின்றது என்றும், அமைதியின் விதை, வளர்ந்து கனிதரும்பொருட்டு முதலில் அது இறக்கவேண்டும் என இயேசுவின் வாழ்வும், புனிதர்களும் எடுத்துரைக்கின்றனர் என்றும் கூறியத் திருத்தந்தை, ஒருவரை தோற்கடிப்பதால் அல்லது பிறர்மீது வெற்றியடைவதால் அமைதி கிட்டாது, அது ஒருபோதும் வன்முறையாலும், ஆயுதங்களாலும் கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.
இதயத்தில் வன்முறையை அகற்ற
அமைதி ஏற்படுத்துவோராக மாற ஒருவர் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, சுடுசொற்களைக் கூற அல்லது பகைமை எண்ணங்களைக் கொண்டிருக்க நமக்குத் திறன் இருந்தாலும், இயேசுவின் சிலுவையின்முன் நின்று அவருக்கு நம்மையே திறப்பது மற்றும், ஒப்புரவு அருளடையாளத்தில் அவரிடமிருந்து மன்னிப்பு மற்றும், அமைதியைப் பெறுவதன் வழியாக இதயத்திலிருந்து வன்முறையை அகற்றுவதே இதற்கு முதல் படி என்று கூறியுள்ளார்.
தினசரி வாழ்வின் செயல்கள் வழியாக அமைதியை அல்லது, வேதனை மற்றும், புறணி பேசுதலைக் கொணர ஆவல் கொள்கிறோமா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ளவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, அமைதி ஏற்படுத்துவோருக்கு நிலைவாழ்வில் பலன் கிடைக்கும் என்றும், அமைதி ஏற்படுத்துவது என்பது, அநீதிக்கு எதிராகப் போராடுதலும், பிறரை மன்னிப்பதும் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்