அனைத்துலக காரித்தாஸ் அமைப்பிற்குப் புதிய நிர்வாகி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தற்காலிக நிர்வாகியாக முனைவர் Pier Francesco Pinelli அவர்களை நியமித்துள்ளதாகத் தான் வெளியிட்டுள்ள ஆணை ஏட்டில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 22, இச்செவ்வாயன்று, திருத்தந்தை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், முனைவர் Maria Amparo Alonso Escobar மற்றும் அருள்பணியாளர் Manuel Morujão சே.ச. ஆகிய இருவரும் முனைவர் Pinelli அவர்களின் ஆதரவாளர்களாகவும், அவ்வமைப்பிலுள்ள பணியாளர்களின் ஆன்மிக வழிகாட்டிகளாகவும் செயல்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வமைப்பின் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் திருஅவைசார் உதவியாளர் அனைவரும் தங்கள் பணிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவர் என்றும், இந்நாள் வரை அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், முனைவர் Pinelli-யிடம் ஒப்பட்டைக்கப்பட்டுள்ள பணிகளில் அவருக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையானது, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் செயல்பாடுகளை ஒரு தனிப்பட்ட குழு மதிப்பாய்வு செய்த பிறகே திருத்தந்தை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளதுடன், நிதி விடயங்கள் நன்கு கையாளப்பட்டு, நிதி திரட்டும் இலக்குகள் தொடர்ந்து எட்டப்பட்டுள்ளன என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
முனைவர் Pinelli, எல்லராலும் நன்கு அறியப்பட்ட நிறுவன ஆலோசகர் மற்றும் நிர்வாகி என்றும், தொழில்நுட்ப வழியைவிட மனிதநேயத்துடன் செயல்படக்கூடியவர் என்றும் தனது பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை.
அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு என்பது, 162 கத்தோலிக்க துயர்துடைப்பு, மனித முன்னேற்றம் மற்றும் சமூகப் பணி அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் துணை மாநிலங்களில் பணியாற்றி வருகிறது. அதன் தலைமையகம் திருப்பீடத்துடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்