63 வயது கர்தினால் Baawobrன் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஆப்ரிக்காவின் கானா நாட்டு கர்தினால் Richard Kuuia Baawobr அவர்கள், நவம்பர் 27, இஞ்ஞாயிறு மாலையில் உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் தனது 63வது வயதில் இறைபதம் சேர்ந்தார் என்று, White Fathers எனப்படும் ஆப்ரிக்க மறைபோதகர்கள் சபையின் தலைமைப் பொதுச் செயலர் அருள்பணி André-Léon Simonart அவர்கள் அறிவித்துள்ளார்.
1959ஆம் ஆண்டு ஜூன் 21ம் தேதி கானா நாட்டின் Tom-Zendagangn என்ற ஊரில் பிறந்த கர்தினால் Richard Baawobr அவர்கள், 1979ஆம் ஆண்டில் தன் மெய்யியல் படிப்பை முடித்து 1981ஆம் ஆண்டில் ஆப்ரிக்க மறைபோதகர்கள் சபையில் சேர்ந்தார்.
1987ஆம் ஆண்டில் அச்சபையில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், உரோம் பாப்பிறை விவிலிய நிறுவனத்திலும் (1991 – 1996) கல்வியை முடித்து, பிரான்ஸ் நாட்டின் லியோனில் இஞ்ஞாசியார் ஆன்மிகம், விவிலியத்தில் முனைவர் பட்டப் படிப்பு ஆகியவற்றையும் முடித்துள்ளவர்.
ஆப்ரிக்க மறைபோதகர்கள் சபையில் முதலில் உதவித் தலைவராகப் (2004-2010) பணியாற்றிய இவர், 2010ஆம் ஆண்டில் அச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் பணியை ஆற்றினார். அச்சபையின் தலைவராக ஆப்ரிக்கர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே முதன் முறையாகும்.
2016ஆம் ஆண்டில் கானா நாட்டின் Wa மறைமாவட்ட ஆயராக நியமனம் செய்யப்பட்ட இவர், ஆப்ரிக்கத் திருஅவை மற்றும், உலகளாவியத் திருஅவையிலும் சில முக்கிய பொறுப்புக்களையும் வகித்திருந்தார். இவர் 2022ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டார். இவர் கர்தினாலுக்குரிய சிவப்புத் தொப்பி, மோதிரம் போன்றவற்றை வழங்கும் திருஅவையின் திருவழிபாட்டில் கலந்துகொள்ள உரோம் வந்த இவர், திடீரென நோயுற்றதால் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் இவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்குப்பின்னர் உடல்நலம் குணமாகி வந்த கர்தினால் Baawobr அவர்கள், மீண்டும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, நவம்பர் 27, இஞ்ஞாயிறன்று இறைவனடி சேர்ந்தார்.
இக்கர்தினாலின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆகக் குறைந்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்