தேடுதல்

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள்  

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உக்ரைன் பேராயர் சந்திப்பு

உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து ஐ.நா. அமைப்புகள், ஏறத்தாழ ஒரு கோடியே 35 இலட்சம் பேருக்கு, உயிர்காக்கும் உதவிகளை வழங்கியுள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான்

வத்திக்கானின் Mater Ecclesiae இல்லத்தில் தங்கியிருக்கும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, கடுமையான போர் இடம்பெற்றுவரும் தன் நாட்டிற்காக இறைவேண்டல் செய்யுமாறு, உக்ரைனின் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

நவம்பர் 09, இப்புதனன்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, உக்ரைனின் தற்போதைய மனிதாபிமான நிலவரம் குறித்தும், அந்நாட்டில் இடம்பெற்றுவருவது கருத்தியல் மற்றும், காலனி ஆதிக்கப் போர் என்றும், நாத்சி ஆட்சியைப் போன்ற கொடூரம் தற்போது அங்கு இடம்பெற்று வருகிறது என்றும், பேராயர் ஷேவ்சுக் அவர்கள் விளக்கியுள்ளார்.

பேராயர் ஷேவ்சுக் அவர்களின் பகிர்வைக் கேட்டபின்பு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், உக்ரைனுக்காகத் தான் தொடர்ந்து செபித்துவருவதாக கூறியுள்ளார். பேராயரும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், உக்ரைனில் போர் தொடங்கிய நாள்களில், அத்தலத்திருஅவைக்கு எழுதிய கடிதத்தில், துயருறும் அந்நாட்டு மக்களோடு, தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அமைதி விரைவில் கிடைப்பதற்குத் தான் தொடர்ந்து செபிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் பேராயர் ஷேவ்சுக் அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து, உக்ரைனின் அப்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்து, தன் நாட்டிற்காகத் தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

இரஷ்ய இராணுவப்ப் படையினரால் தாக்கப்பட்டMykolaiv
இரஷ்ய இராணுவப்ப் படையினரால் தாக்கப்பட்டMykolaiv

உக்ரைனில் ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள்

மேலும், உக்ரைனில் இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து ஐ.நா. நிறுவனமும், அதன் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவும் அமைப்புகளும், ஏறத்தாழ ஒரு கோடியே 35 இலட்சம் பேருக்கு, உயிர்காக்கும் உதவிகளை வழங்கியுள்ளன என்று, நவம்பர் 10, இவ்வியாழனன்று ஐ.நா.வின் இணைப் பேச்சாளர் Stéphanie Tremblay அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். 

உக்ரைன் இராணுவம், அண்மையில் Kharkiv மற்றும், Kherson நகரங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அரசு வங்கிகளில் பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, 42 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது என்று Tremblay அவர்கள் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, 86 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு நலவாழ்வுப் பணிகளை ஆற்றியுள்ளோம் என்று கூறியுள்ள Tremblay அவர்கள்,  எடுத்துக்காட்டாக, இம்மாதத்தில், உக்ரைனின் குறைந்தது 19 மாநிலங்களிலுள்ள பெண்களுக்கு உதவும்வண்ணம், ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி அமைப்பு (UNFPA),  முப்பது நடமாடும் மருந்தக வாகனங்களை வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2022, 13:15