தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன்  உலகளாவிய கத்தோலிக்க ஆசிரியர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் உலகளாவிய கத்தோலிக்க ஆசிரியர்கள். 

WUCT கழகம், திருத்தந்தையின் உடன்உழைப்பாளர்கள்

நம்பிக்கையில் விதைக்கப்பட்ட விதைகள் வேர்விட்டு வளரும் என்பதில் உறுதியாயிருங்கள் - உலக கத்தோலிக்க ஆசிரியர்கள் கழகத்தினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நம்பிக்கையில் விதைக்கப்பட்ட விதைகள் வேர்விட்டு வளரும் என்பதில் உறுதியாயிருங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய கத்தோலிக்க ஆசிரியர்களிடம், நவம்பர் 12, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

திருப்பீடத்தின் கலாச்சார மற்றும் கல்வித் துறை, உலக கத்தோலிக்க ஆசிரியர்கள் கழகத்தினருக்கு ((WUCT) உரோம் நகரில் நடத்திய மாநாட்டில் பங்குகொண்ட ஏறத்தாழ ஐம்பது பேரை, வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு அக்கழகத்தினரை ஊக்கப்படுத்தினார்.

இக்கழகத்தினர் அண்மை வரலாற்றில் எதிர்கொண்ட கடும் இடர்களுக்கு மத்தியில்,  நம்பிக்கை மற்றும், கிறிஸ்தவ எதிர்நோக்கு உணர்வில், கடவுளிலும், திருஅவையின் ஆதரவிலும் நம்பிக்கை வைத்து, தங்களின் அர்ப்பணத்தில் உறுதியாய் இருந்துள்ளதைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகெங்கும் கத்தோலிக்கப் பள்ளிகள், கிறிஸ்தவ மற்றும், ஏனையப் பள்ளிகளில் பணியாற்றும் கத்தோலிக்க ஆசிரியர்கள், தனியாகவும், குழுவாகவும், தங்களின் தனித்துவத்தில் நிலைத்திருக்கவும், மறைப்பணியை முன்னெடுத்துச் செல்லவும், இக்கழகம் அனைத்து ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தி உதவி வருவதால், “திருத்தந்தையின் உடன்ழைப்பாளர்கள்” என, இக்கழகத்தினரைக் கூறுவேன் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் சகோதரர் சகோதரிகளை, நம்பிக்கையில் உறுதிப்படுத்துவதும், அதை அவர்களில் பேணிக்காப்பதுமே புனித பேதுருவின் வழிவரும் திருத்தந்தையரின் பணி என்பதால் இக்கழகத்தினரை இவ்வாறு கூறுவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆசிரியரும், இளையோரும்

ஆசிரியர்கள், பொருள்களுக்கு அல்ல மாறாக, உயிருள்ள மனிதர்களுக்குப் பணியாற்றுகின்றனர் எனவும், தங்களிடம் பயிலும் சிறாரும் இளையோரும் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே இருப்பார்கள் எனவும், இளையோர் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள் எனவும் உரைத்த திருத்தந்தை, இதனால் ஆசிரியர்கள் தங்களின் இலக்குகள் மற்றும், கற்பிக்கும் முறையை தொடர்ந்து மீள்மதிப்பீடு செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர்கள், தங்களின் மாணவர்களோடு ஒன்றுசேர்ந்து வளரும் ஆவலைக் கொண்டிருக்கவேண்டும், இன்றைய இளையோருக்கு ஏற்றவகையில் மொழி மற்றும், கலாச்சார வடிவங்களில் தங்களை இணைத்து, உண்மையைக் கற்றுக்கொள்வது, மற்றும், அதன் மீது ஆர்வம் கொள்வதில் இருக்கின்ற மகிழ்வை அவர்களில் ஏற்படுத்தவேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். 

கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தம் குறித்த விழிப்புணர்வை, கத்தோலிக்க ஆசிரியர்களிடம் இக்கழகத்தினர் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உலகில் கற்றல் மற்றும், கற்பிக்கும் சிறந்த முக்கிய மறைப்பணி, இக்கழகத்தினரைக் காத்திருக்கின்றது, எனவே நம்பிக்கையோடு வருங்காலத்தை நோக்குமாறு ஊக்கப்படுத்தியதோடு தன் ஆசிரை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

சவால்நிறைந்த உங்களது பணியில் நான் உங்களோடு உடனிருக்கிறேன் என்று உறுதி கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் உலக கத்தோலிக்க ஆசிரியர்கள் கழகத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2022, 15:30