தேடுதல்

 இரவு நேர ஒளியில் பஹ்ரைன் இரவு நேர ஒளியில் பஹ்ரைன் 

திருத்தந்தையின் பஹ்ரைன் திருத்தூதுப் பயண விவரங்கள்

"உரையாடலுக்கான பஹ்ரைன் அவை: மனித நல்லிணக்கத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு" என்ற கருத்தரங்கில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கு மேற்பட்ட பல்சமயத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பரில் பஹ்ரைன் நாட்டிற்கு மேற்கொள்ளும் அவரது 39வது திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை, அக்டோபர் 06, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது, திருப்பீட செய்தித் தொடர்பகம்.

நவம்பர் 3,2022

நவம்பர் 3, வியாழன், உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பஹ்ரைன் நாட்டிற்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அந்நாட்டின் Awali நகரின் சாஹீர் பன்னாட்டு விமான நிலையத்தை அந்நாட்டு நேரம் மாலை 4.45 மணிக்குச் சென்றடைவார் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

"உரையாடலுக்கான பஹ்ரைன் அவை: மனித நல்லிணக்கத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு" என்ற கருத்தரங்கில் பங்குகொள்வதற்காக அந்நாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Awali விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றபின், Sakhir அரண்மனையில் அந்நாட்டு அரசர் Hamad bin Isa Al Khalifa அவர்களைச் சந்திப்பார்.

அன்று மாலை 6.30 மணியளவில் சாஹீர் மாளிகையில் பஹ்ரைன் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், மற்றும், பொது மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பஹ்ரைனில் நடைபெறவிருக்கும் "உரையாடலுக்கான பஹ்ரைன் அவை: மனித நல்லிணக்கத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு" என்ற கருத்தரங்கு, அந்நாட்டு அரசர் Hamad bin Isa Al-Khalifa அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பஹ்ரைன் புனித மரியா ஆலயம்
பஹ்ரைன் புனித மரியா ஆலயம்

நவம்பர் 04,2022

நவம்பர் 04, வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில், Sakhir அரண்மனையின் Al-Fida' வளாகத்தில் நடைபெறும் "உரையாடலுக்கான பஹ்ரைன் அவை: மனித நல்லிணக்கத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு" என்ற கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் திருத்தந்தை, அதே அரண்மனைப் பகுதியிலுள்ள திருத்தந்தையின் பிரதிநிதித்துவ இல்லத்தில், அன்று மாலை நான்கு மணிக்கு, முஸ்லிம் பெரிய குரு IMAM OF AL-AZHAR அவர்களோடு தனியே சந்தித்து உரையாடுவார்.

அன்று மாலை 5.45 மணிக்கு, அரேபியா அன்னை மரியா பேராலயத்தில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, அமைதிக்காக நடைபெறும் வழிபாட்டில்  கலந்துகொண்டு மறையுரையாற்றும் திருத்தந்தை, நவம்பர் 05, சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பஹ்ரைன் தேசிய அரங்கில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுவார்.

நவம்பர் 05,2022

நவம்பர் 05, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அவாலி நகர் இயேசுவின் திருஇருதயப் பள்ளியில் இளையோரைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை, நவம்பர் 06 ஞாயிறு காலை 9.30 மணியளவில், பஹ்ரைன் தலைநகர் மனமாவில் இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், மேய்ப்புப் பணியாளர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றி, மூவேளை செபத்தையும் செபிப்பார்.

நவம்பர் 06,2022

நவம்பர் 06, ஞாயிறு பகல் 12.30 மணிக்கு அவாலி சாஹீர் விமான நிலையத்தில் பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரோமுக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று உரோம் நேரம் மாலை 5 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் வந்துசேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பஹ்ரைன் நாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2022, 14:41