பஹ்ரைன் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை, தலைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
இவ்வாண்டு நவம்பர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பஹ்ரைன் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை மற்றும், தலைப்பு குறித்த விளக்கத்தை, அக்டோபர் 06, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது, திருப்பீட செய்தித் தொடர்பகம்.
“உலகில் நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக!” (காண்க. லூக். 2:14) என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை, இரு கரங்கள், கடவுளை நோக்கித் திறந்துள்ளது போன்ற அழகான வடிவமைப்பில், பஹ்ரைன் மற்றும், வத்திக்கான் நாடுகளின் கொடிகளைக் கொண்டிருக்கிறது.
முற்சார்பு எண்ணங்களிலிருந்து விடுபட்டும், சகோதரர் சகோதரிகளாக திறந்தமனதுள்ள உணர்வோடும், மக்களும் நாடுகளும், ஒருவர் ஒருவரைச் சந்திப்பதற்குத் தங்களையே அர்ப்பணிப்பதன் அடையாளமாகவும் இக்கரங்கள் உள்ளன எனவும், உடன்பிறந்த உணர்வில் இடம்பெறும் சந்திப்பின் கனி, அமைதி எனவும், இது, இவ்விரு கரங்களுக்கு மத்தியில் வரையப்பட்டுள்ள ஒலிவக் கிளையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
இலச்சினையின்கீழ், “திருத்தந்தை பிரான்சிஸ்” என்ற சொற்கள் நீல நிறத்தில் எழுதப்பட்டுள்ளன என்றும், இவை, “அரேபியாவின் நமதன்னை” என வணங்கப்படும் புனித கன்னி மரியாவின் பரிந்துரையிடம் இத்திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணிப்பதாக உள்ளன என்றும் அத்தொடர்பகம் கூறியுள்ளது.
பஹ்ரைன் கத்தோலிக்கப் பேராலயத்தின் பாதுகாவலரான “அரேபியாவின் நமதன்னை” திருவுருவம், அந்நாட்டிலுள்ள கத்தோலிக்க சமுதாயத்திற்கு அந்நாட்டு அரசு வழங்கிய நன்கொடை என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தூதுப் பயணத்தின் தலைப்பு
“உலகில் நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்ற இத்திருத்தூதுப் பயணத்தின் தலைப்பு, லூக்கா நற்செய்தியில் ஆண்டவரின் பிறப்பு குறித்து விண்ணகத் தூதர் பேரணி பாடிய பாடல் வரிகளால் தூண்டப்பட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்