தேடுதல்

ஒன்றிப்பு மற்றும் விடுதலை இயக்கத்தினருடன் திருத்தந்தை

பன்மையில் ஒருமை என்பதை ஏற்பவர்களாக, முரண்பாடுகளை நன்முறையில் அணுகி அவைகளுக்கு தீர்வு காண முன்வருவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்த பேரருள்திரு Luigi Giussani அவர்களின் 100வது பிறந்த நாளையொட்டி, உரோம் நகர் வந்திருந்த, ஒன்றிப்பு மற்றும் விடுதலை என்ற இயக்கத்தின் அங்கத்தினர்களை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சந்தித்து உரை ஒன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் மிலானைச் சேர்ந்த பேரருள்திரு Giussani அவர்களால் துவக்கப்பட்ட, ஒன்றிப்பு மற்றும் விடுதலை இயக்கத்தின் ஏறத்தாழ 60,000 அங்கத்தினர்களை புனித பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை, அக்டோபர் 15ம் தேதி சந்தித்து உரையாடிய திருத்தந்தை,  பேரருள்திரு Giussani அவர்களின் புத்தகங்களால் தானும் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பயனடைந்துள்ளதாக எடுத்துரைத்தார்.

மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகர சக்தி கொண்டவராக இருந்தார், கல்வியாளராக இருந்தார், திருஅவையின் மகவாக இருந்தார் என்ற மூன்று தலைப்புகளில் பேரருள்திரு Giussani குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல ஆயிரக்கணக்கான இளையோரின் மனங்களைக் கவர்ந்து அவர்களை இயேசுவின்பால் திருப்ப வல்லவராக அவர் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

பேரருள்திரு Giussani அவர்களின் தனிவரத்தைக் காணும் நாம், நமக்குள் ஒளிந்திருக்கும் நம் திறமைகளை வெளிக்கொணரவும், அச்சத்தாலும் ஆன்மீக சோர்வுறுதலாலும் முடங்கிவிடாமல் முன்னோக்கிச் செல்லுமாறும் அனைவரையும் வேண்டுகிறேன் என விண்ணப்பித்தார் திருத்தந்தை.

சிறந்த கல்வியாளராக இருந்த பேரருள்திரு Giussani  அவர்கள், மதத்தைக் குறித்த இளையோரின் அறியாமையை நேரடியாகப் பார்த்தவராகவும், இயேசுவுடன் தான் கொண்டிருந்த அனுபவத்தை அவர்களுடன் பகிர ஆர்வமுடன் முன்வந்தவர் என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓர் அருள்பணியாளரக இருந்த பேரருள்திரு Giussani அவர்கள், திருஅவையின் குழந்தையாக, திருஅவையை அதிகம் அதிகமாக அன்புகூர்ந்தது மட்டுமல்ல, தன் அழ்ந்த தியான வாழ்வு வழியாக திருஅவைக்கு பல்வேறு வழிகளில் உதவினார் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

ஒன்றிப்பு மற்றும் விடுதலை அமைப்பை சேர்ந்த மக்கள் மத்தியில்  திருத்தந்தை பிரான்சிஸ்
ஒன்றிப்பு மற்றும் விடுதலை அமைப்பை சேர்ந்த மக்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தூதர் பணி நூல் பிரிவு 8 எடுத்துரைக்கும், திருத்தூதர் பிலிப்புவுக்கும் எத்தியோப்பிய அரச அலுவலருக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் குறித்தும் எடுத்தியம்பிய திருத்தந்தை, அந்த அரசு அலுவலர் மனம்மாற பிலிப்பு உதவிவிட்டு அங்கிருந்து அகன்றதுபோல், நாமும் பிறருக்கு உதவுவதோடு, அவர்களை இறைவன் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஒன்றிப்பு என்பது, அனைவரும் ஒரே வகையில், ஒத்தக்கருத்தில் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை, மாறாக, பன்மையில் ஒருமை என்பதை இது ஆதரிக்கிறது என்பதையும் எடுத்துரைத்து, எந்த ஓர் இயக்கத்தின் பயணத்திலும் வித்தியாசமான உள்ளுணர்வுகளும் முரண்பாடுகளும் தோன்றுவது இயல்பே, அவைகளை நன்முறையில் அணுகித் தீர்வுகாண வேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2022, 14:04