திருத்தந்தை: உடன்பிறந்த உணர்வோடு பசியைப் போக்குவோம்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வுலகத்தில், மனிதர் மையப்படுத்தப்படவேண்டும் என்பது ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உணவு குறித்த உலக கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
உரோம் மாநகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் FAO என்னும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில், உலக உணவுத் திட்ட அமைப்பு (WFF), அக்டோபர் 17 இத்திங்கள் முதல், 21, வருகிற வியாழன் வரை நடத்தும் உணவு குறித்த இரண்டாவது உலக கருத்தரங்கில் பங்குபெறும் உறுப்பினர்களுக்கு, இத்திங்கள் மாலையில் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவருக்கு வெறும் உணவை மட்டும் அளித்தால் போதாது, மாறாக, அவர்களுக்கு உடன்பிறந்த உணர்வு மற்றும், தோழமையில் பணியாற்ற நம்மையே அர்ப்பணிக்கவேண்டும், இது, தனிநபர்கள் மற்றும், மக்களுக்கு இடையே உறவுகள் உருவாகத் தூண்டுதலாய் இருக்கும் எனக் கூறியுள்ளார் திருத்தந்தை.
“இளையோர் செயல்திறன்”, “அறிவியல், புதியன படைத்தல், மற்றும், முதலீடு" என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்விற்கு அனுப்பியுள்ள செய்தியில், மனித சமுதாயம் முழுவதன் நன்மை மற்றும், வருங்காலத்திற்காகத் தீர்மானங்கள் எடுக்கவேண்டும், மற்றும், முன்னெடுப்புகளை ஊக்குவிக்கவேண்டும் என்பதை, கிறிஸ்து நமக்குச் சவாலாக முன்வைக்கிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
உணவின் புனிதம்
உலகில் பசி, மற்றும் ஏழ்மையை ஒழிக்க, ஒவ்வொரு நாளும் தங்களையே அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் தன் வாழ்த்தைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, உணவு, மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவை என்றும், அது வாழ்வின் புனிதத்துவத்தைப் பகிர்ந்துகொள்கிறது மற்றும், உணவை, ஏனைய விற்பனைப் பொருள்கள் போன்று நடத்தமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
படைத்தவரின் நன்மைத்தனம், மற்றும், பூமியின் கனிகளின் தெளிவான அடையாளமாக உணவு உள்ளது எனவும், நம் தாத்தாக்கள், பாட்டிகள், உணவு மேஜைக்கு கொண்டுவரப்படும்போது அதை முத்திசெய்தனர் மற்றும், எதுவும் வீணாவதை அவர்கள் அனுமதித்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவர்கள் உணவு மீது வைத்திருந்த மதிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்துவும் திருநற்கருணையில் இவ்வுலகின் வாழ்வுக்கு உ.யிருள்ள உணவாக மாறுகிறார் என்றுரைத்துள்ள திருத்தந்தை, உணவு மதிக்கப்படவும், மனித வாழ்வில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுமென அதன் உற்பத்தி, விநியோகம் போன்றவற்றில் கவனமாய் இருக்கக் கேட்டுக்கொண்டார்.
உணவு கடவுளின் கொடை, நாம் அதன் பாதுகாவலர்கள் மட்டுமே என்பதை உணர்ந்திருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் பசிக்கொடுமை நிலவும் இவ்வாண்டில் இவ்வுலக கருத்தரங்கு நடைபெறுகின்றது.
போர், கோவிட் பெருந்தொற்று, காலநிலை மாற்றம் மற்றும், விலைவாசி உயர்வு ஆகியவை, உலகில் 82 கோடியே 80 இலட்சம் மக்கள் பசியால் வாடும் நிலைக்கு உட்படுத்தியுள்ளன என்று ஐ.நா. கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்