தேடுதல்

புதன் பொது மறைக்கல்வியுரை (2022.02.23) புதன் பொது மறைக்கல்வியுரை (2022.02.23)   (Vatican Media)

வயதுமுதிர்ந்தோர், கனிவன்பின் ஆசிரியர்களாக மாற முடியும்

ஐ.நா. பொது அவை, 1990ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் முதல் நாள் சிறப்பிக்கப்படவேண்டும் என்று அறிவித்தது

மேரி தெரேசா: வத்திக்கான்

வயதுமுதிர்ந்தோராகிய நாம் பலநேரங்களில், பராமரிப்பு, பாசம் மற்றும் சிந்தனை ஆகியவற்றை அதிகம் சார்ந்து இருக்கிறோம், ஆயினும், நாம் கனிவன்பின் ஆசிரியர்களாக மாற முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட வயதுமுதிர்ந்தோர் உலக நாளையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, போருக்குப் பழக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், கனிவன்பின் ஓர் உண்மையான புதிய புரட்சி நமக்குத் தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

“மாறிவரும் உலகில் வயதுமுதிர்ந்தோரின் மீட்டெழுச்சி” என்ற தலைப்பில், வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

ஐ.நா. பொது அவை, 1990ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் முதல் நாள் சிறப்பிக்கப்படவேண்டும் என்று அறிவித்தது.

1950க்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் மனிதரின் ஆயுள்காலம் 46 ஆண்டுகளிலிருந்து 68 ஆக உயர்ந்தது. 2019ஆம் ஆண்டில் உலக அளவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 70 கோடியே 30 இலட்சம் பேர் இருந்தனர். அடுத்த மூன்று பத்தாண்டுகளில் இவ்வெண்ணிக்கை இருமடங்குக்கும் மேலாக உயர்ந்து, 2050ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 150 கோடிக்குமேல் இருக்கும் என்று, ஐ.நா.  அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும், தென் கிழக்கு ஆசியாவில் இவ்வெண்ணிக்கை அதிகமாக இருக்கும், அதாவது 57 கோடியே 30 இலட்சமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேராயர் பிரான்சிஸ் அசிசி சுள்ளிக்காட்

மேலும், போஸ்னியா எர்செகொவினா குடியரசின் திருப்பீடத் தூதராக பேராயர் பிரான்சிஸ் அசிசி சுள்ளிக்காட் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார். இவர் இதுவரை, Kazakistan, Kyrgyzstan மற்றும், Tadjikistan நாடுகளின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 13:48