திருத்தந்தை, ஸ்கலாபிரினி மறைப்பணியாளர்கள் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
மனித சமுதாயம் மற்றும், சந்திப்பின் செய்தியை ஊக்குவியுங்கள், அதேநேரம், படைப்பாற்றலோடு செயல்பட ஒருபோதும் தயங்காதீர்கள் என்று, புனித ஸ்கலாபிரினி மறைப்பணியாளர்களிடம், அக்டோபர் 10, இத்திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 09, இஞ்ஞாயிறன்று, தங்கள் சபைகளை ஆரம்பித்த ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்ட நிகழ்வுக்கு உரோம் நகருக்கு வந்திருந்த பல்வேறு நாடுகளின் ஸ்கலாபிரினி மறைப்பணியாளர்கள், இத்தாலியின் கோமோ மற்றும், பியாச்சென்சா மறைமாவட்டங்களின் கத்தோலிக்கர், புலம்பெயர்ந்தோர் என ஆயிரக்கணக்கான மக்களை இத்திங்களன்று வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த சந்திப்பில் கலந்துகொள்ளும் பன்மைக் கலாச்சாரங்களைக்கொண்ட மக்கள், ஒரு மறைமாவட்டம் போதாது என்றுரைத்த ஆயர் ஸ்கலாபிரினியின் மூச்சை, மற்றும், அவரது திறந்தமனதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இத்தாலிய புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருந்த ஆயர் ஸ்கலாபிரினியின் திருத்தூதுப்பணி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார்.
1800களின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான இத்தாலியர்களுக்கு ஸ்கலாபிரினி அவர்கள் பணியாற்றியபோது அம்மக்களில் கிறிஸ்துவை நோக்கினார், அவர்களுக்குப் போதுமான பொருள்களையும், ஆன்மிக உதவிகளையும் செய்தார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நேற்றைய புலம்பெயர்வு போலவே...
நேற்றைய புலம்பெயர்வு போலவே, இன்றையப் புலம்பெயர்வும் உள்ளது எனவும். ஸ்கலாபிரினியின் காலத்தைப் போலவே இக்காலத்திலும் புலம்பெயர்வுகள் முக்கியமான சவால்களை முன்வைக்கின்றன எனவும், புறக்கணிப்புக்குமுன்னர் உடன்பிறந்த உணர்வையும், ஒதுக்கப்படுவதற்கு முன்னர் ஒருமைப்பாட்டுணர்வையும் முன்னிறுத்தவேண்டியது இன்று அதிகமாகத் தேவைப்படுகின்றது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கும், அவர்களை ஏற்கும் நாடுகளுக்கும் இடையே ஒரு சமமான சந்திப்பை உருவாக்கும், சந்திப்புக் கலாச்சாரத்தை வாழவும், அதனைப் பரப்பவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றுரைத்த திருத்தந்தை, அனைவருக்கும் சிறந்ததோர் ஓர் உலகை அமைக்கும்வண்ணம் நாம் கடைநிலையில் இருப்பவர்களிடமிருந்து செயல்பாட்டைத் தொடங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
உடன்பிறந்த உணர்வும், சமூகநட்பும் வளரும்பொருட்டு படைப்பாற்றலோடு சிந்திக்கவேண்டும், மற்றும், கலை, இசை, ஒன்றுசேர்ந்து வாழ்தல் ஆகியவை, பன்மைக்கலாச்சாரத்தின் கருவிகளாக மாறவேண்டும் என்றும், புனித ஸ்கலாபிரினி தொடங்கிய சபைகளின் உறுப்பினர்கள், அப்புனிதரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி வாழவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்