தேடுதல்

பெல்ஜிய இளையோர் சந்திப்பு பெல்ஜிய இளையோர் சந்திப்பு 

இளையோரிடம் திருத்தந்தை: அமைதியின் தூதர்களாகச் செயல்படுங்கள்

உடன்பிறந்த உணர்வு, அமைதி, ஒப்புரவு ஆகிய விழுமியங்களால் தூண்டப்பட்ட, மாறுபட்ட ஓர் உலகைக் கட்டியெழுப்பவல்ல இளையோரின் ஆர்வம் திருஅவைக்குத் தேவை – பெல்ஜிய இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உலகப்போக்கு அதிகரித்துவரும் ஒரு சமுதாயத்தில், அன்றாட வேலைகளுக்கு மத்தியில் நற்செய்தி அறிவிப்புப்பணி திட்டங்களுக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியை வாழ்ந்துகாட்டுவதற்கும் தங்களையே அர்ப்பணித்துள்ள பெல்ஜிய நாட்டு இளையோருக்கு தன் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெல்ஜியத்திலிருந்து உரோம் நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ள ஏறத்தாழ முன்னூறு இளையோரை, அக்டோபர் 10, இத்திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நவீன சமுதாயத்தில் கிறிஸ்தவத்திற்குச் சான்றுகளாய் வாழ்கின்ற அவர்களின் துணிச்சலைக் கண்டு வியப்படைவதாகக் கூறியுள்ளார்.  

அச்சம், மனக்காயங்கள், இன்னல்கள், முரண்பாடுகள் போன்றவற்றை சிலநேரங்களில் எதிர்கொண்டாலும், மகிழ்ச்சி மற்றும், ஆர்வத்தை அனுபவிப்பதற்கு காரணம், கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் உறுதியான உறவு என்று அவ்விளையோரிடம் கூறியத் திருத்தந்தை, இயேசுவைச் சந்திப்பது, சூழல்களைப் புதியதாக நோக்கச்செய்யும், கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும், மற்றும், வாழ்வை முன்னோக்கிச் செல்லவைக்கும் என்று கூறியுள்ளார்.

இயேசு, ஒருபோதும் ஏமாற்றாத பிரமாணிக்கமுள்ள நண்பர் எனவும், நீங்கள் செல்லுமிடமெல்லாம் நற்செய்தியின் தூதர்களாகச் செயல்படுவதில் ஒருபோதும் சோர்வடையாதீர்கள் எனவும், பெல்ஜிய இளையோரிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வாழ்வைச் சோதிக்கும் காரியங்களால் திசைதிருப்பப்படாமல், கிறிஸ்துவின் நட்பிலிருந்து மலரும் இன்றியமையாதவைகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

2023ஆம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளுக்கு, பெல்ஜிய இளையோர் தயாரிப்புக்களில் ஈடுபட்டிருக்கும்வேளை, அனைத்து இளையோரோடும், குறிப்பாக துயரச் சூழல்களில் வாழ்வோர், புலம்பெயர்ந்துள்ள இளையோர், குடிபெயர்ந்தோர், சாலைகளில் வாழ்வோர், தனிமை, மற்றும், கவலையில் உள்ளவர்களோடு தோழமையுணர்வைக் காட்டுமாறு திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார்.

இளையோராகிய நீங்கள், உண்மையும், நேர்மையும்கொண்ட திருஅவைக்காக ஏங்குகிறீர்கள் என்பதை அறிவேன், அதேநேரம், இந்த இலக்கை எட்டுவதற்கு தனிப்பட்டமுறையில் நீங்கள் ஆற்றுவது என்ன? ஒரு மகிழ்வான கிறிஸ்தவ சமுதாயம் உருவாக உங்களது பங்களிப்பு என்ன? என்ற கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளுமாறு இளையோரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உடன்பிறந்த உணர்வு, அமைதி, ஒப்புரவு ஆகிய விழுமியங்களால் தூண்டப்பட்ட, மாறுபட்ட ஓர் உலகைக் கட்டியெழுப்ப ஆர்வமுள்ள இளையோர் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபமாலை அன்னையிடம் அவர்களை அர்ப்பணித்துச் செபிப்பதாகவும், அதேநேரம் தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனவும் பெல்ஜிய இளையோரைக் கேட்டுக்கொண்டு, தன் ஆசிரையும் அளித்தார்.

Montenegro பிரதமர் Dritan Abazović

திருத்தந்தை, Montenegro பிரதமர் Dritan Abazović
திருத்தந்தை, Montenegro பிரதமர் Dritan Abazović

மேலும், Montenegro குடியரசின் பிரதமர் Dritan Abazović அவர்கள், அக்டோபர் 10, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2022, 14:55