2023, 2024ஆம் ஆண்டுகளில் உலக ஆயர்கள் மாமன்றம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
“ஒருங்கிணைந்து பயணம்” என்ற தலைப்பில் நடைபெறும் 16வது உலக ஆயர்கள் மாமன்றம், இரு அமர்வுகளாக (கூட்டத்தொடர்களாக), 2023ஆம் ஆண்டு அக்டோபரிலும், 2024ஆம் ஆண்டு அக்டோபரிலும் இடம்பெறும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 16, இஞ்ஞாயிறன்று அறிவித்துள்ளார்.
இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியபின் இவ்வாறு அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றம் 2023ஆம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது, அதே மாமன்றம், இரு அமர்வுகளாக (கூட்டத்தொடர்களாக), 2024ஆம் ஆண்டு அக்டோபரிலும் இடம்பெறும் என்று அறிவித்தார்.
நீடிக்கப்பட்டுள்ள தெளிந்துதேர்தல்
16வது உலக ஆயர்கள் மாமன்றத்தன் முதல்நிலை தயாரிப்புகள், செவிமடுத்தல், மற்றும், தெளிந்துதேர்தலை மையப்படுத்தி 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி, தொடங்கியது, இதன் முதல் கனிகள் பல ஏற்கனவே கிடைத்துள்ளன, ஆயினும், இவை முழு பக்குவம் உள்ளதாக மாறுவதற்கு கூடுதலாக நேரம் தேவைப்படுகிறது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தெளிந்துதேர்தலின் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், இரண்டாவது கூட்டத்தொடர் 2024ஆம் ஆண்டு அக்டோபரிலும் இடம்பெறும் என்று திருத்தந்தை அறிவித்தார்.
இத்தீர்மானம், ஒருங்கிணைந்து பயணம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும், மற்றும் நற்செய்தியின் மகிழ்வுக்குச் சான்றுபகரும் சகோதரர் சகோதரிகளின் ஒன்றிணைந்த பயணமாக அனைவரும் வாழ்வதற்கு உதவும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
Episcopalis Communio
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்தீர்மானம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம், Episcopalis Communio என்ற திருத்தூது கொள்கைத் திரட்டு, ஒரே உலக ஆயர்கள் மாமன்றம், பல கூட்டத்தொடர்களாக நடைபெறுவதற்குரிய வாய்ப்புக்கு அனுமதியளிக்கிறது என்று அறிவித்துள்ளது.
திருஅவையின் ஒருங்கிணைந்த பயணம்” என்ற 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைப்பு, உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் மட்டுமல்ல, அகில உலகத் திருஅவையும் தெளிந்துதேர்வு செய்யவேண்டும் என்பதைச் சார்ந்து உள்ளதாலும், அத்தலைப்பின் முக்கியம் மற்றும், அதன் விரிவானதன்மையை முன்னிட்டும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், அப்பொதுச் செயலகம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்