எத்தியோப்பியா, உக்ரைனில் அமைதி நிலவ திருத்தந்தை செபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
எத்தியோப்பியாவின் திக்ரே மாநிலத்தில் நீடித்த, நிலையான அமைதி நிலவத் தீர்வுகளைக் காணுமாறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்த அதேநேரம், ஆப்ரிக்காவில் பல்வேறு நாடுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இஞ்ஞாயிறன்று இறைவேண்டல் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 23, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல நாடுகளின் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரையாற்றி ஆசிர் வழங்கியபின்னர், உலகில் போர் மற்றும், இயற்கைப் பேரிடர்களால் துயருறும் மக்களுக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
எத்தியோப்பியாவில் தொடர்ந்து இடம்பெறும் ஆயுதமோதல்களால் கையறுநிலையில் உள்ள மக்களின் துன்பங்களைக் களையும்வண்ணம், அந்நாடு முழுவதும் நிலைத்த அமைதி நிலவுவதற்காக நியாயமான தீர்வுகளைக் காணுமாறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திக்ரே மாநிலத்தில் போரில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்கள், உரையாடல், மற்றும், பொது நலனைக் கருத்தில்கொண்டு ஒப்புரவுப் பாதையைத் தெரிவுசெய்ய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, திக்ரே மாநிலத்தில் ஏறத்தாழ ஈராண்டுகளுக்குமுன் போர் தொடங்கியதிலிருந்து அப்பகுதி வன்முறையால் நிறைந்துள்ளது என்றும், ஐந்து மாத மனிதாபிமான போர் நிறுத்தத்திற்குப்பின் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர்
எத்தியோப்பிய நம் சகோதரர், சகோதரிகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்த திருத்தந்தை, பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் இறப்புகள் மற்றும், அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்ற வெள்ளத்தில் இறந்தவர்கள் மற்றும், புலம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான மக்களுக்காகச் செபிப்போம் என்றும், திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
மேற்கு, மற்றும், மத்திய ஆப்ரிக்காவில் 19 நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது.
அக்.25ல் உலகில் அமைதிக்காக இறைவேண்டல்
அக்டோபர் 25, வருகிற செவ்வாயன்று, உரோம் நகரிலுள்ள கொலோசேயத்தில், உலகின் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும், மதங்களின் பிரதிநிதிகள் இணைந்து உக்ரைன் மற்றும் உலகின் அமைதிக்காக கண்ணீரோடு உருக்கமாகச் செபிக்கவுள்ளனர், அதில் அனைவரும் ஆன்மிக முறையில் ஒன்றித்திருக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அழைப்புவிடுத்தார்.
இவ்வளவு கொடூரமாகச் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் இஞ்ஞாயிறன்று பணியேற்ற புதிய அரசுக்கு தன் நல்வாழ்த்தையும் தெரிவித்தார். இப்புதிய அரசு இத்தாலியில் ஒன்றிப்பு மற்றும், அமைதிக்காக உழைக்கவேண்டும் என்று செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்