தேடுதல்

இறை இரக்கத் திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (2020.10.05 2016) இறை இரக்கத் திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (2020.10.05 2016)  

திருத்தந்தை: உக்ரைனில் அமைதி நிலவ செபியுங்கள்

புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள் வழியாக கடவுள் தம் இரக்கத்தில் மீட்பைத் தேடும் வழிகளை உலகிற்குக் காட்டியுள்ளார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து போர் இடம்பெற்றுவரும் உக்ரைனில் கடுந்துயரங்களை எதிர்கொண்டுவரும் அந்நாட்டு மக்களை இப்புதனன்று மீண்டும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் அமைதி நிலவ அமைதியின் அரசியாம் அன்னை மரியாவின் பரிந்துரையை மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்டோபர் 05, இப்புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் குறித்து ஆற்றிய பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் போலந்து நாட்டுத் திருப்பயணிகளை வாழ்த்தியபோது உக்ரைனுக்காகச் செபிக்குமாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் திருவழிபாட்டில் புனித Faustina Kowalskaவை நினைவுகூர்ந்தோம், இப்புனிதை வழியாக, கடவுள் தம் இரக்கத்தில் மீட்பைத் தேடும் வழிகளை உலகிற்குக் காட்டியுள்ளார் என்றும், இந்நாளில் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை சிறப்பாக நினைத்துப் பார்ப்போம் என்றும், இதயங்களை மாற்றவல்ல கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அன்னை மரியாவின் பரிந்துரையை இறைஞ்சுவோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

புனித Faustina Kowalska

இறை இரக்கப் பக்தி உலகில் பரவக் காரணமான புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும், இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்ற இவர், போலந்து நாட்டின் Głogowiecவில் 1905ஆம் ஆண்டு பிறந்து 1938ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி கிராக்கோவ் நகரில் தனது 33வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது, அக்டோபர் 4, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் இறை அர்ப்பணம், மக்கள் சேவை, படைப்போடு கொண்டிருந்த உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றை நம் வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைப்போம் என்று திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2022, 12:56