திருத்தந்தை: உலகெங்கும் துன்புறும் சிறாருக்காகச் செபிப்போம்
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகெங்கும் இலட்சக்கணக்கான சிறார், அக்கால அடிமைத்தனத்தையொத்த துயர நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றவேளை, அவர்களுக்காக இந்நவம்பர் மாதத்தில் சிறப்பாக இறைவேண்டல் செய்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கர் எல்லாருக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.
தனது ஒவ்வொரு மாதப் பொதுக் கருத்தை காணொளி வழியாக விளக்கி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நவம்பர் மாதப் பொதுக்கருத்து குறித்து அவர் எடுத்துரைத்துள்ள காணொளிச் செய்தி, அக்டோபர் 31, இத்திங்கள் மாலையில் வெளியிடப்பட்டது.
உலகெங்கும் பல்வேறு நிலைகளில் துயருறும் சிறாருக்காக இந்நவம்பர் மாதத்தை அர்ப்பணித்துள்ள திருத்தந்தை, ஒரு குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இருப்பது நமது தவறு என்றும், விளையாட, கல்விகற்க, மற்றும், கனவு காண ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமையுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதனால், அவர்கள் கல்வி கற்கவும், குடும்பப் பாசத்தை அனுபவிக்கவுமான வாய்ப்புக்கு உறுதி வழங்கப்படவேண்டும் என்றும், தனிமை மற்றும், கைவிடப்பட்டுள்ளதாக உணரும் நிலையை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது என்றும், இதனால் கடவுள் தங்களை மறக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
குழந்தைகள் ஒவ்வொன்றும், தங்களின் சொந்த முகத்தோடும், கடவுள் அவர்களுக்கு அளித்துள்ள தனித்துவத்தோடும் பெயர்களைக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது என்றும், அவர்களைப் பராமரிப்பதற்கு நாம் பொறுப்பேற்கவேண்டும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
தனது குடும்பத்தால் கல்வியின்றி, உடல்நலப் பராமரிப்பின்றி புறக்கணிக்கப்பட்ட மற்றும், கைவிடப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் கதறுகின்றது, அதன் அழுகை, கடவுள் வரை செல்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, இத்தகைய நிலையை உருவாக்கிய வயதுவந்தோர் வெட்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வீடற்ற, பெற்றோரை இழந்து கைவிடப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட சிறார் என துன்புறும் அனைத்துச் சிறாருக்கும், கல்வி மற்றும் குடும்பப் பாசத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உறுதியாக கிடைக்க நாம் மன்றாடுவோம் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐ.நா.வின் உலக குழந்தைகள் நாள்
நவம்பர் 14, இந்திய தேசிய குழந்தைகள் நாள், நவம்பர் 20, ஐ.நா.வின் உலக குழந்தைகள் நாள் என்பது கவனிக்கத்தக்கது.
கல்வி, உடல்நலம், குடியிருப்பு, உணவு, மருத்துவம், தண்ணீர் போன்ற வசதிகளின்றி, வறுமையின் பல்வேறு வடிவங்களில், உலக அளவில் நூறு கோடிச் சிறார் வாழ்ந்து வருகின்றனர் என்று யுனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.
2021ஆம் ஆண்டு இறுதியில், 45 கோடிக்கும் மேற்பட்ட சிறார் போர் இடம்பெறும் பகுதிகளில் வாழ்ந்தனர். இது, கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமான எண்ணிக்கையாகும் என்றும், போரினால் 3 கோடியே 65 இலட்சம் சிறார் புலம்பெயர்ந்தனர் என்றும், ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்